முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் கொலையாளிகள் வழக்கை வேறு கோர்ட்டிற்கு மாற்ற தமிழக அரசு எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி,அக்.- 11 - தூக்குத்தண்டனையை எதிர்த்து ராஜீவ் காந்தி கொலையாளிகள் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை வேறு கோர்ட்டிற்கு  மாற்ற சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  ஸ்ரீபெரம்பூரில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த ராஜீவ் காந்தியை விடுதலைபுலிகள் மனித குண்டுவெடித்து படுகொலை செய்தனர். இதுதொடர்பான வழக்கில் விடுதலைப்புலிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் என்ற அறிவு மற்றும் அவர்களுக்கு உதவி செய்த தமிழகத்தை சேர்ந்த பெண் நளினி ஆகியோர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. இதில் நளினிக்கு குழந்தை இருப்பதால் கருணை அடிப்படையில் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 3 பேருக்கும் தூக்குத்தண்டனையை சுப்ரீம்கோர்ட்டு உறுதி செய்தது. இந்தநிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதியிடம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் கருணை மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது ஜனாதிபதி முடிவு எடுக்க 11 ஆண்டுகள் ஆகின. கருணை மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. கருணை மனு மீது முடிவு எடுக்க 11 ஆண்டுகளானதால் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத்தண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரி அந்த 3 பேரும் சென்ன ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் இந்த 3 பேருக்கும் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் கோரி வருகின்றன. தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தூக்குத்தண்டனை பெற்றுள்ள 3 பேருக்கு ஆதரவாக ஒரு சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டமும் நடத்தி வருகின்றன. அதனால் வழக்கை விசாரிப்பதற்கான சூழ்நிலை இல்லை. விசாரணை நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க வாய்ப்பு இல்லை. வழக்கு விசாரணையை சுப்ரீம்கோர்ட்டிற்கு மாற்றக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் எல்.கே.வெங்கட் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விசாரணை நேற்று நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி எஸ்.ஜே.முஹோபாத்யாயா ஆகியோர் கொண்ட பெஞ்சில் நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் குருகிருஷ்ண குமார் ஆஜரானார். அந்த 3 பேர் சார்பாக பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். மனுதாரர் வெங்கட் சார்பாக எல். நந்தகுமார் ஆஜரானார். அப்போது நந்தகுமார் வாதாடுகையில் அந்த 3 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கிறது. அதனால் அங்கு நியாயமாகவும் நேர்மையாகவும் விசாரணை நடப்பதற்கான சூழ்நிலை இல்லை. அதனால் அந்த 3 பேர் தொடர்ந்துள்ள வழக்கை சென்னை ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம்கோர்ட்டிற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறினார். இதற்கு தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குருகிருஷ்ண குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகத்தில் அப்படி ஒரு சூழ்நிலை இல்லை. சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. அங்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அமைதி நிலவுகிறது. அதனால் வழக்கை சென்னை ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம்கோர்ட்டிற்கு மாற்றக்கூடாது என்றார். அந்த 3 பேர் சார்பாக ஆஜரான ராம் ஜெத்மலானி வாதாடுகையில் வழக்கை வேறு கோர்ட்டிற்கு மாற்றக்கோரும் அதிகாரம் இந்திய அரசு வழக்கறிஞருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும்தான் உள்ளது. இதுகுறித்து அரசியல் சட்டம் 139எ பிரிவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது என்றார். வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன் ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்