முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச ஆடுகளை வழங்கியதன் மூலம் தமிழகத்தின் தெய்வத்தாய் முதல்வர்தான்- மேலூர் மக்கள்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மேலூர், அக். - 11 - ஏழை, எளிய மக்களுக்கு இலவச ஆடு மற்றும் மாடுகளை வழங்கி அவர்களது வாழ்வில் ஒளிவிளக்கேற்றி வைத்த தமிழக முதல்வர் உண்மையிலேயே தெய்வத்தாய்தான் என்று மேலூர் பயனாளிகள் புகழாரம் சூட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.  ஏழை, எளிய பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் மற்றும் மாடுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியின் போது அறிவித்து அதனை செயல்படுத்தியும் உள்ளார். தமிழக முதல்வராக 3 வது முறையாக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு நன்மை அளிக்கும் விதமாக பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி தமிழக மக்களுக்கு கருணை உள்ளத்தோடு செய்து வருகிறார். பதவியேற்ற முதல் நாளன்றே ஏழு நல்ல காரியங்களை நிறைவேற்ற அவர் கையெழுத்திட்டது தமிழக மக்கள் நன்றாக அறிந்த ஒன்று. ஏழை பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம், முதியோர்களுக்கு உதவித் தொகை போன்ற பல திட்டங்களை நிறைவேற்ற பதவியேற்ற முதல் நாளன்றே கையெழுத்திட்ட முதல்வர் ஜெயலலிதா அதை படிப்படியாக நிறைவேற்றியும் வருகிறார். மேலும் ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி, தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்றவற்றையும், மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்பையும் வழங்க உத்தரவிட்டு முதல்வர் அதை செயல்படுத்தியும் வருகிறார். நீலகிரி கொடைக்கானல் போன்ற மலைவாழ் மக்களுக்கு மின் விசிறிக்கு பதிலாக மின்சார அடுப்பு வழங்கவும் அவர் கருணையோடு உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமின்றி, ஏழை பயனாளிகளுக்கு கறவை மாடுகள், 4 ஆடுகள் ஆகியவற்றையும் ஜெயலலிதாவின் அரசு வழங்கி வருகிறது. சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து ஏழை பயனாளிகளுக்கு இலவச ஆடுகளை வழங்கினார். இதனால் வாழ்க்கையில் நம்பிக்கையிழந்து சோர்ந்து போயிருந்த ஏழை தாய்மார்கள் இப்போது நம்பிக்கையோடு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். ஆடு, மாடுகள் வழங்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியும் பெருகும் என்பதோடு மட்டுமல்லாது, அது வெண்மை புரட்சிக்கும் வழிவகுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வரும் முதல்வர் ஜெயலலிதாவை பலதரப்பட்ட மக்களும் பாராட்டுகிறார்கள். குறிப்பாக, தாய்மார்கள் அவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் உள்ள அரசப்பன்பட்டி கிராமத்தில் கடந்த மாதம் 15 ம் தேதியன்று அண்ணா பிறந்த நாளன்று அங்குள்ள ஏழை, எளியோருக்கு இலவச ஆடுகள் வழங்க 31 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆடுகளை சந்தையில் வாங்க பயனாளிகளை கால்நடை அதிகாரிகள் நேரடியாக அழைத்து சென்று தலா ரூ. 10 ஆயிரத்தை வழங்கினர். சந்தையில் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வாங்கிய பயனாளிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். அது மட்டுமல்லாது, ஆடுகளை சந்தையில் இருந்து தங்களது இருப்பிடங்களுக்கு கொண்டு செல்ல வாகன வாடகை, ஆடுகளை பாதுகாக்க வீட்டின் அருகே கொட்டகை அமைக்கவும், ஆடுகள் பல்வேறு இடர்பாடுகளால் இறக்க நேரிட்டால் அதை சரி செய்யும் வகையில் அவைகளுக்கு இன்சூரன்ஸ் வசதி போன்றவையும் செய்து கொடுக்கப்பட்டது. இதனால் ஆடுகளைப் பெற்ற பயனாளிகள் மகிழ்ச்சியில் திளைத்துப் போயினர். 

இவ்வாறு மகிழ்ச்சியில் திளைத்துப் போன அரசப்பன்பட்டி கிராமத்தை பயனாளிகள் சிலர் கூறுகையில், 

சுமதி:

எனது கணவர் பெயர் நாட்டாமை. எனக்கு திருமணமாகி 18 ஆண்டுகளாகி விட்டது. என் கணவர் இறந்து 9 ஆண்டுகளாகி விட்டன. 3 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை. எனது பெற்றோரும் மிகவும் கஷ்டப்பட்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். கூலி வேலைக்கு சென்றுதான் என் பிள்ளைகளை படிக்க வைக்கிறேன். குடும்ப வருமானம் போதாததால் என் மூத்த மகன் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு  கூலி வேலைக்கு சென்று வருகிறான். வாழ்க்கையை எப்படி கடத்துவது என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பால் எங்களுக்கு  இலவச ஆடுகள் கிடைத்தது. இப்போது என் குடும்பமும் ஏழ்மை நிலையில் இருந்து மீண்டு நல்வாழ்விற்கு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு துளிர் விட்டுள்ளது. எனது கடைசி மகனை கூலி வேலைக்கு அனுப்பாமல் நன்கு படிக்க வைப்பேன். என் வாழ்க்கையில் ஒளி விளக்கேற்றிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் என்று நாதழுதழுக்க கூறினார். 

அரியநாச்சி:

எனக்கு திருமணமாகி ஓராண்டிலேயே எனது கணவர் பிரிந்து சென்று விட்ட நிலையில் நான் மறுமணம் ஏதும் செய்து கொள்ளவில்லை. நான் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. எனக்கு 28 வயதில் ஆண் மகன் உள்ளான். எனது வருமானம் குறைவாக இருந்ததால் மிகவும் கஷ்டப்பட்டு பிழைப்பு நடத்தி வந்தேன். இதனால் என் மகனின் படிப்பும் பாதியில் நின்றது. அவன் தற்போது கூலி வேலைக்கு செல்கிறான். அவனுக்கு திருமணமாகவில்லை. முதல்வர் ஜெயலலிதாவால் கிடைத்த ஆட்டின் மூலம் வரும் வருமானத்தை வைத்து மகனின் திருமணத்தை சிறப்பாக செய்வேன். எனக்கு ஆடுகள் தந்து என் வாழ்க்கையில் வளம் பெறச் செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என் சந்ததியினர் அனைவரும் கடமைப்பட்டுள்ளனர் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினார். 

சுந்தரவள்ளி:

எனது கணவர் கூலி வேலைக்குத்தான் சென்று வருகிறார். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களை படிக்க வைக்க நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இவ்வாறு கலங்கியிருந்த நேரத்தில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் எங்களுக்கு இலவச ஆடுகள் கிடைத்தது. ஆடுகள் குட்டி போட்டவுடன் வருமானம் அதிகரிக்கும். இதனால் எங்களது வாழ்க்கை சிறக்கும் என்று கண்ணீர் மல்க கூறினார். 

ரெங்கநாயகி:

என் கணவரும், நானும் கூலி வேலைக்கு சென்றுதான் எங்களது வாழ்க்கைச் சக்கரம் நகர்கிறது.  எங்களது இரு பெண் குழந்தைகளும் படித்து வருகின்றனர். வேலைக்கு சென்றால்தான் உணவு என்று இருந்த எங்களது இருண்ட வாழ்வில் முதல்வர் ஜெயலலிதா இலவச ஆடுகளை வழங்கி விளக்கேற்றி வைத்துள்ளார். அவருக்கு எங்கள் குடும்பம் நன்றிக்கடன்பட்டுள்ளது. 

மூக்காயி:

எனது கணவரின் இறப்பிற்கு பிறகு கூலி வேலை செய்து என் மூன்று மகன்களையும் பெரியவர்களாக்கி அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தேன். இப்போது நான் தனியாக வாழ்க்கை நடத்தி வருகிறேன். தற்போது வயதாகி விட்டதால் கூலி வேலைக்குக் கூட செல்ல முடியவில்லை. இந்த நிலைமையில் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய ஆடுகள் எனக்கு பேருதவியாக உள்ளது. இனி என் கடைசி காலம் வரை மகிழ்ச்சியாக இருப்பேன் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினார். 

சீனியம்மாள்:

என் கணவர் இறந்து விட்டார். எனக்கு 2 பெண்கள். ஒரு பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. எனது மூத்த மகளுக்கு கடன் வாங்கித்தான் திருமணம் முடித்து வைத்தேன். நான் கூலி வேலைக்கு செல்வதால் வரும் வருமானம் போதவில்லை. கடனை அடைக்க முடியவில்லை. என் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இலவச ஆடுகளை வழங்கினார். இன்னும் 6 மாதத்தில் அந்த ஆடுகள் குட்டி போட்டு விடும். அதில் வரும் வருமானத்தை வைத்து என் இளைய மகளின் திருமணத்தை நடத்தி வைத்து விடுவேன். இலவச ஆடுகள் வழங்கிய முதல்வருக்கு நன்றி என்று கூறினார். 

அமராவதி:

எனது திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் என் கணவர் பிரிந்து சென்று விட்டார். என் பெற்றோருடன்தான் வசித்து வருகிறேன். எனக்கு பிள்ளைகளும் இல்லை. வேறு திருமணமும் செய்து கொள்ளவில்லை. என் பெற்றோரும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மிகவும் கஷ்டப்படுகிறேன். இப்படி என் வாழ்க்கை சென்று கொண்டிருந்த போதுதான் முதல்வர் ஜெயலலிதா எனக்கு இலவச ஆடுகளை வழங்கினார். இவ்வளவு பெரிய உதவி செய்து என் வாழ்க்கையை வெளிச்சமாக்கிய முதல்வர் ஜெயலலிதாவை மறக்க மாட்டேன் என்று கண்ணீர்மல்க கூறினார். 

மூக்காயி: என் கணவர் இறந்து 10 ஆண்டுகளாகி விட்டது. என் மகன் 12 ம் வகுப்பு படித்து வருகிறான். கூலி வேலைக்கு சென்று தான் அவனை படிக்க வைக்கிறேன். எனக்கு வயதாகி விட்டதால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்தது. அப்போதுதான் முதல்வர் ஜெயலலிதா இலவச ஆடுகளை வழங்கினார். இனி வரும் காலங்களில் ஆட்டின் மூலம் வரும் வருமானத்தை வைத்து கவலையில்லாமல் என் மகனை படிக்க வைப்பேன். என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய உதவியை செய்த அந்த புண்ணிய தாயை மறக்க மாட்டேன் என்று கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்