முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் பெங்களூர் அணியை தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 11 அக்டோபர் 2011      விளையாட்டு
Image Unavailable

சென்னை, அக்.- 11​- சென்னையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 3​வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23​ந்தேதி தொடங்கியது. போட்டியில் பங்கேற்ற 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் முடிவில் `ஏ' பிரிவில் நியூ சவுத்வேல்ஸ், மும்பை இந்தியன்ஸ், `பி' பிரிவில் சோமர்செட், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. லீக் சுற்றுடன் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கேப் கோப்ராஸ், டிரினிடாட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா, வாரியர்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 2009​ம் ஆண்டு சாம்பியனான நியூ சவுத்வேல்சையும், மும்பை இந்தியன்ஸ் அணி சோமர்செட்டையும் தோற்கடித்து இறுதி சுற்றுக்குள் நுழைந்தன.  இந்த நிலையில் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இறுதி ஆட்டம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இறுதிப்போட்டியில் ஐ.பி.எல். அணிகளான வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும், ஹர்பஜன்சிங் தலைமையிலான மும்பை இந்தியன்சும் பலப்பரீட்சையில் இறங்கின.  டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்பஜன்சிங் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். பிளிஸ்சார்ட்டும், சருல் கன்வாரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். அரைஇறுதியில் அரைசதம் அடித்து கைகொடுத்த பிளிஸ்சார்ட் (3 ரன்), துரதிர்ஷ்டவசமாக ரன்​ அவுட்டில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கன்வாரும் (13 ரன்) வெளியேறினார். அம்பத்தி ராயுடுவும் (22 ரன்) nullநீண்ட நேரம் நிலைக்கவில்லை.   இதன் பிறகு ஜேம்ஸ் பிராங்ளினும், சூர்யகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர்.  13.4 ஓவர்களில் மும்பை அணி 100 ரன்களை கடந்தது. இவர்கள் களத்தில் நின்ற வரை மும்பை அணி 150 ரன்களை தாண்டும் போல் தெரிந்தது. ஆனால் சூர்யகுமார் யாதவும் (24 ரன், 17 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), பிராங்ளினும் (41 ரன், 29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) அடுத்தடுத்து ரன்​அவுட் ஆனது, ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது. இதன் பிறகு அணியின் ரன்வேகம் ஒரேயடியாக குறைந்து போனது. கடைசி கட்டத்தில் மலிங்கா மட்டும் ஆறுதல் அளிக்கும் வகையில் 2 சிக்சருடன் 16 ரன்கள் விளாசினார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆல்​ அவுட் ஆனது. இதில் அதிரடி காட்ட வேண்டிய கடைசி 5 ஓவர்களில் வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்தது.    பின்னர் 140 ரன்கள் இலக்கை நோக்கி கிறிஸ் கெய்லும், தில்ஷனும் பெங்களூர் அணியின் ஆட்டக்காரர்களாக ஆட வந்தனர். பவுண்டரியுடன் அணியின் ஸ்கோரை தில்ஷன் துவக்கினார். இலங்கையைச் சேர்ந்த தில்ஷன் தனது பங்குக்கு 27 ரன்கள் (20 பந்து, 5 பவுண்டரி) எடுத்த நிலையில், சக நாட்டவரான மலிங்காவின் பந்து வீச்சில் கிளீன் போல்டானார். ஸ்கோர் குறைவு என்பதாலும், கடினமான ஆடுகளம் என்பதாலும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் நிதானமாக ஆட முயற்சித்தார். அதுவே அவருக்கு எமனாக அமைந்தது. 5 ரன்னில் (12 பந்து, ஒரு பவுண்டரி) ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.  அதிரடி நாயகர்கள் பெவியன் திரும்பியதும், பெங்களூர் அணி தடுமாறத் தொடங்கியது. அகர்வாலும் (14 ரன், 19 பந்து), விராட் கோலியும் (11 ரன், 19 பந்து) அடுத்தடுத்த ஓவர்களில் பிடிகொடுத்து வெளியேறினர். அணியை தூக்கி நிறுத்த தவறினார்கள். எதிரணியின் முன்னணி வீரர்கள் சீக்கிரம் வெளியேறியதால், மும்பை அணிக்கு உற்சாகம் பிறந்தது.   அதன் தொடர்ச்சியாக பெங்களூர் அணிக்கு மேலும் சில விக்கெட்டுகள் சரிந்தன. ரன்தேவை அதிகரித்து கொண்டே போனதால், பெங்களூர் அணி கடுமையான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. ஆட்டமும் மும்பை அணியின் கைக்குள் வந்தது.  இலக்கை நெருங்க முடியாமல் தவித்த பெங்களூர் அணி இறுதியில் 19.2 ஓவர்களில் 108 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.  பெங்களூரில் நடந்த முந்தைய இரு ஆட்டங்களில் 200 ரன்களுக்கு மேல் ரன்களை எளிதாக சேசிங் செய்த பெங்களூர் அணியால் சென்னை மைதானத்தில் 139 ரன்களை கூட சேசிங் செய்ய முடியாமல் போனது, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. பெங்களூர் அணி இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் இறுதிவரை வந்து தோற்றது. அதற்கு சாம்பியன்ஸ் லீக்கில் பரிகாரம் தேடிக்கொள்ள முயற்சித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாய்ப்பு மறுபடியும் நழுவி போய் விட்டது.  
சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி ரூ.11.6 கோடியை பரிசுத்தொகையாக தட்டிச்சென்றது.  2​வது இடம் பிடித்த பெங்களூர் அணிக்கு ரூ.6 கோடி கிடைத்தது. அரைஇறுதியில் தோற்ற அணிகள் தலா ரூ.2.3 கோடியை பரிசாக பெற்றன. ஐ.பி.எல். போட்டிகளில் தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், சாம்பியன்ஸ் லீக்கில் பட்டம் வென்றது மும்பை அணிக்கு ஆறுதலாக  அமைந்தது. கேப்டன் தெண்டுல்கர், முனாப்பட்டேல், ரோகித் ஷர்மா ஆகிய நட்சத்திர வீரர்கள் காயத்தால் விலகிய நிலையிலும் மும்பை அணி சாதித்திருப்பது கவனிக்கத்தக்கது.   மும்பை இந்தியன்ஸ் வீரர்களில் ஹர்பஜன்சிங் ஆட்டநாயகன் விருதினையும், மலிங்கா தொடர்நாயகன் விருதினையும் பெற்றனர். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த நியூ சவுத்வேல்ஸ் வீரர் டேவிட் வார்னருக்கு தங்கபேட் விருது கிடைத்தது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago