முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சியில் கோடிக்கணக்கில் தி.மு.க.வினர் கொள்ளை

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, அக். - 12 - உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி அம்மன் கோவிலையும் மற்றும் பல பிரசித்தி பெற்ற இடங்களையும் தன்னகத்தே கொண்ட மிகப் பெரிய சுற்றுலா ஸ்தலம்தான் மதுரை. இந்த மதுரை  மாநகரை பராமரித்து வருவது மதுரை மாநகராட்சி நிர்வாகம். கடந்த மாநகராட்சி தேர்தல் 2006 ல் நடைபெற்றது. அப்போது மதுரை மாநகராட்சியில் 72 வார்டுகள் இருந்தன. நகரின் மொத்த பரப்பளவு 58 சதுர கி.மீ. ஆகும். கடந்த 2006 ல் நடந்த மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று மேயர் பதவியை கைப்பற்றியது. 2006 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டுவரை மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்து கொண்டு தி.மு.க.வினர்  தங்களால் எவ்வளவு சுருட்ட முடியுமோ அந்த அளவுக்கு மாநகராட்சியின் நிதியை கொள்ளையடித்து கபளீகரம் செய்துவிட்டனர். கோடிக்கணக்கில் தி.மு.க.வினர் மாநகராட்சி நிதியை கபளீகரம் செய்திருப்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.  மதுரை நகரில் உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்திருப்பதாலும், இந்த நகர் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாக இருப்பதாலும், மதுரை நகரை மேம்படுத்தும் திட்டம் ஒன்றை மதுரை மாநகராட்சி தி.மு.க. நிர்வாகம் கடந்த 2006 ம் ஆண்டு தீட்டியது. அந்த திட்டத்திற்கு ரூ. 2,000 கோடி செலவு செய்வது என பட்ஜெட் தயார் செய்து, இந்த திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து 50 சதவீதமும், மாநில அரசிடம் இருந்து 20 சதவீதமும் பெற்று மீதமுள்ள 30 சதவீதத் தொகையை மதுரை மாநகராட்சி செலவு செய்து  இந்த திட்டத்தை செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக மதுரை மாநகராட்சி அனுப்பிவைத்தது. இத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட  மத்திய, மாநில அரசுகள் ரூ. 1000 கோடி நிதியை மதுரை மாநகராட்சிக்கு வழங்கின. இந்த நிதியைக் கொண்டு வைகை குடிநீர் திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், குடிசை வீடுகளை அகற்றி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் வடிகால் திட்டம், மதுரை மாநகரில் உள்ள 11 பெரிய கால்வாய்களின் இருபுறமும் சிமிண்ட் தடுப்புச் சுவர் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. நிர்வாகம் தீட்டியது. ஆனால் இந்த திட்டங்களை தீட்டுவதற்கு முன்பே, தி.மு.க.வினர் அந்த பணத்தை எப்படி கொள்ளையடிப்பது என்ற திட்டத்தையும் தீட்டி செயல்படுத்தினர். இந்த திட்டங்களில் பல்வேறு முறைகேடுகளை செய்து கமிஷன்கள் பெறப்பட்டுள்ளன. மாநகராட்சி  தி.மு.க. நிர்வாகம் முழுமையாக 5 ஆண்டுகள் பொறுப்பில் இருந்தும், தீட்டப்பட்ட அனைத்து  திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் அரைகுறையாக பாதியிலேயே கைவிடப்பட்டுள்ள அவலத்தைத்தான் காணமுடிகிறது. ஒவ்வொரு திட்டத்தையும் இப்படி அரைகுறையாக செய்து அதன் மூலம்  

கொள்ளையடித்த பணத்தை ஒரு முக்கியப் புள்ளிக்கு கப்பமாக செலுத்தியிருப்பதும் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

11 கால்வாய்களை சீரமைக்கும் திட்டத்திற்காக ரூ. 320 கோடி ஒதுக்கப்பட்டு எந்த கால்வாயும் முழுமையாக சீரமைக்கப்படாமல் அந்த வேலைகள் பாதியிலேயே நின்றுபோய்விட்டன. இந்த திட்டத்திற்காக கால்வாய்களின் இருபுறமும் தடுப்புச் சுவர் அமைப்பதற்காக விலை குறைந்திருந்த நேரத்தில் 800 டன் முறுக்குக் கம்பிகளை மாநகராட்சி நிர்வாகம் வாங்கியது. இரும்புக் கம்பிகளின் விலை கூடியபோது அந்த 800 டன்  கம்பிகளையும் தனியாருக்கு கூடுதல் விலைக்கு விற்று அந்த பணத்தையும் தி.மு.க.வினர் கபளீகரம் செய்துவிட்டனர். 

இதேபோல் குடிசைகளை அகற்றிவிட்டு ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தில் பலகோடி ரூபாய் கமிஷன் பெற்றிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் குப்பை கிடங்குகளை நவீனப்படுத்தி அதிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம் என ஒரு திட்டத்தை வகுத்து, அந்த திட்டம் செயல்படுத்தப்படாமலே பணத்தை கொள்ளையடித்துவிட்டனர்.

மதுரை நகரில் பாதாள சாக்கடை திட்டம் எந்த பகுதியிலும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. பாதாள சாக்கடை திட்டமே செயல்படுத்தப்படாத நிலையில் தி.மு.க.வினர் கொள்ளை அடிப்பதற்காகவே இன்னொரு திட்டத்தை வகுத்து செயல்படுத்தி இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. பாதாள சாக்கடைகளில் இருந்து வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து நல்ல தண்ணீராக மாற்றும் திட்டம் ஒன்றை தயாரித்து அதற்காக அவனியாபுரம் வெள்ளக்கல் மற்றும் சக்கிமங்கலம் பகுதியில் ஒரு பெரிய கட்டிடம் கட்டி, அதில் நவீன இயந்திரத்தை பொருத்தாமல் தி.மு.க. மாநகராட்சி நிர்வாகம் அதிகாரிகளை வைத்து திறப்பு விழாவை கோலாகலமாக நடத்தியது. ஆனால் அங்கு தண்ணீரை மதுரை நகரில் இருந்து கொண்டுசெல்வதற்கு குழாய்களே அமைக்கப்படவில்லை. அதனால் திறப்புவிழா கண்ட அந்த திட்டம் இப்போது மூடுவிழா நடத்தக்கூடிய நிலையில் உள்ளது. வெறும் கட்டிடங்கள் மட்டுமே அங்கு நினைவுச் சின்னங்களாக காட்சியளிக்கிறது. இதைக் காணும் பொதுமக்கள் தங்களது வரிப்பணம் இப்படி வீணாகிறதே என்று வேதனைப் பெருமூச்சு விடுகின்றனர். 

வைகையிலிருந்து குழாய்மூலம் மதுரை நகருக்கு கொண்டுவரும் குடிநீர்த் திட்டம் பலகோடி ரூபாயில் தீட்டப்பட்டு தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தி.மு.க. மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்து அந்த திட்டத்தை செயல்படுத்தியது. அந்த திட்டம் சரியாக பராமரிக்கப்படாததால் வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டுவர சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததால் அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் தற்போதுகூட ஒருநாள் விட்டு ஒருநாள்தான் குடிநீர் மதுரை நகரில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடிநீர் குழாய்கள் மதுரை நகரில் பூமிக்குள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழாய்கள் வாங்குவதில்கூட பலகோடி ரூபாய் முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பூமிக்குள் புதைக்கப்பட்ட குடிநீர்க் குழாய்கள் தரம் குறைந்த குழாய்களாக இருப்பதால் பல்வேறு இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு அருகே சென்று கொண்டு இருக்கின்ற பாதாள சாக்கடை தண்ணீரில் கலந்து குடிநீர், கழிவுநீர் கலந்த நீராக வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதனால் பல்வேறு சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 

மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல கிலோ மீட்டர் அளவுக்கு சாலைகள் உள்ளன. இந்த சாலைகளை சீரமைக்கும் பணிக்காக தி.மு.க. மாநகராட்சி கடந்த 2007 ம் ஆண்டு  ஒரு திட்டத்தை தீட்டி, அதற்கான நிதியை மாநில அரசிடம் இருந்து பெற அத்திட்டத்தை மாநில அரசுக்கு அனுப்பிவைத்தது. மாநில அரசும் 150 கிலோமீட்டர் சாலையை சீரமைக்க ரூ. 50 கோடி நிதியை ஒதுக்கி மதுரை மாநகராட்சிக்கு வழங்கியது. அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை. கடந்த 5 வருட காலத்தில் அமைக்கப்பட்ட சாலைகள் தற்போது பெய்த சிறிய மழையைக்கூட தாங்காமல் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. அப்படியானால் தரமற்ற சாலைகளை அமைத்து அதில் பலகோடி ரூபாயை தி.மு.க.வினர் கமிஷனாக பெற்றுள்ளார்கள் என்றுதானே அர்த்தம் என்று பொதுமக்கள் கொந்தளிக்கிறார்கள்.

மழை நீர் சேகரிப்பு திட்டமும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் சரியான முறையில் செயல்படுத்தப்படவே இல்லை. இதற்காக தோண்டப்பட்ட பல இடங்கள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. எந்த வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு முறையாக ஏற்படுத்தப்படவில்லை. இவ்வாறாக மதுரை மாநகரை மேம்படுத்தும் திட்டம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் தீட்டப்பட்ட திட்டங்கள் அலங்கோலமாக, அவசர அவசரமாக, அரைகுறையாக செய்யப்பட்டு பல கோடி தொகையை (மதுரை மாநகராட்சி நிதியை) தி.மு.க.வினர் கொள்ளையடித்திருப்பது மதுரை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தி.மு.க. ஆட்சி இருக்கும்போதே இந்த திட்டங்களில்  ஊழல்கள் நடந்திருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் இந்த விசாரணையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்களை தி.மு.க.வினர் பலிகடா ஆக்கினர். ஆனால் அதற்குப்பின் அந்த விசாரணை என்ன நிலையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியாத நிலையே ஏற்பட்டது. 

அதன்பின்பு இந்த திட்டங்களில் ஏற்பட்ட ஊழல்கள் பற்றி விசாரணை நடத்தும் பொறுப்பை  விஜிலன்ஸ் ஏற்றது. விஜிலன்ஸ் உயர் அதிகாரிகள் இந்த ஊழல்களை விசாரிப்பதற்காக மதுரை மாநகராட்சிக்கு வந்து பல முக்கிய கோப்புகளை அள்ளிச்சென்றுவிட்டனர். ஆனால் அந்த ஊழல் பற்றி அவர்களும் விசாரித்து நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இதற்கிடையில் 2011 மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் தற்போதும் மதுரையில் தி.மு.க. மேயர், துணை மேயரின் பதவிக்காலம் இன்னும் தொடரும் நிலையில் உள்ளாட்சி தேர்தல் வந்துவிட்டது. இப்போது தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த தேர்தலிலும் அ.தி.மு.க.  அமோக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. மதுரை மாநகராட்சியில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று, மதுரை மேயர் மற்றும் துணை மேயர் பொறுப்புகளை அ.தி.மு.க. விரைவில் கைப்பற்ற இருக்கிறது. அவ்வாறு அ.தி.மு.க. வெற்றிபெற்று மதுரை மாநகராட்சியை கைப்பற்றியவுடன்  கடந்த காலத்தில் தி.மு.க.வினர் மதுரை மாநகராட்சியில் அடித்த கொள்ளைகள் பற்றியும், செய்த ஊழல்கள் பற்றியும் விசாரித்து தவறு செய்த தி.மு.க.வினர் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு தண்டிக்க வேண்டுமென மதுரை மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பு நிறைவேறும் காலம் வெகு தொலைவில் இல்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்