முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது நாளை வாக்குப்பதிவு நடக்கிறது

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி,அக்.- 12 - திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் நாளை நடக்கிறது. அனல் பறந்த பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது.  திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சராக இருந்த மரியம்பிச்சை சாலைவிபத்தில் மரணம் அடைந்ததால் ஏற்பட்ட காலி இடத்தை நிரப்புவதற்காக நாளை (13ம் தேதி) வாக்குப்பதிவு நடபெறுகிறது.  இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளராக மு.பரஞ்சோதியும், திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் போட்டியிடுகிறார்கள். இந்திய ஜனநாயக கட்சி, மக்கள் சக்தி ஆகிய கட்சி வேட்பாளர்களுடன் சுயேட்சைகள் உள்பட 16 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. 16 பேர் தேர்தல் களத்தில் இருந்தாலும் அதிமுக வேட்பாளர் மு.பரஞ்சோதிக்கும், திமுக வேட்பாளர் கே.என்.நேருவுக்கும்தான் நேரடி போட்டி நிலவுகிறது. அதிமுக வேட்பாளர் மு.பரஞ்சோதியை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக முதல் அமைச்சர் ஜெயலலிதா இரு தினங்களுக்கு முன் திருச்சி வந்தார். தொகுதிக்கு உட்பட்ட 7 இடங்களில் திறந்த வேன் மூலம் மு.பரஞ்சோதிக்கு ஆதரவாக பேசி விட்டு சென்றார். அமைச்சர்கள், நடிகர், நடிகைகளும் பிரச்சாரம் செய்தனர்.  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் 3 நாட்கள் முகாமிட்டு நேருவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் இரவு திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூடட்த்தில் பேசினார்.  அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள், என முற்றுகையிட்டு அனல் பறக்க நடந்துவந்த திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. நாளை காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாது வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக 240 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளும் பதற்றம் நிறைந்தவையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு எல்லா வாக்கு சாவடிகளிலும் லேப் டாப் வைக்கப்பட்டு அவற்றில் வெப் கேமரா பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் வாக்குப் பதிவு நடைபெறுவதை மாநில தலைமை தேர்தல் அலுவலர் தனது அலுவலகத்தில் இருந்தவாறே நேரடியாக தெரிந்துகொள்ள முடியும். வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச்செல்ல தேவையான பொருட்களை எடுத்துச்செல்லும் பணியில் 1179 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பார்வையாளர்களாக ஆர்.எஸ்.பதக், நிவேதிதா பிஸ்வாஸ், பராசிவமூர்த்தி ஆகியோர் வந்துள்ளனர். 

தேர்தல் அமைதியாகவும், பிரச்சினைகள் இன்றி நடைபெற இந்தோ திபெத் எல்லைப்பாதுகாப்பு படையின் ஒரு கம்பெனி மற்றும் மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் 5 கம்பெனியினர் ஏற்கனவே திருச்சிக்கு வந்து முகாமிட்டுள்ளனர். இவர்கள் தவிர உள்ளூர் போலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடமான சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணிக்கை வரும் 20 தேதி நடைபெறும் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இடைத்தேர்தலையொட்டி திருச்சி மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள், ஓட்டல் பார்கள் அனைத்தும் நேற்று 11ம் தேதி முதல் நாளை 13ம் தேதி வரை 3 நாட்களுக்கு மூடப்படும் என மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்