முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.பி.எஸ். புதிய தேர்வு மதிப்பெண் முறைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்காலதடை

புதன்கிழமை, 12 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை, அக். - 12 - எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்திய புதிய தேர்வு மதிப்பெண் முறைக்கு ஐகோர்ட்டின் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் முதாலாமாண்டு மாணவர்களை 2 ம் ஆண்டில் அனுமதிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் பூர்ணசவுத்ரி உள்ளிட்ட 23 பேர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 19 வது கல்வி மன்ற கூட்டத்தில் எம்.பி.பி.எஸ். தேர்வு மதிப்பெண் கணக்கீட்டு முறையில் சில மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 100 மதிப்பெண்கள் பெற்றால்தான் முதலாமாண்டு மாணவர் இரண்டாமாண்டில் சேர தகுதி பெறுவர். ஏதாவது ஒரு தாளில் குறைந்த மதிப்பெண்ணும் மற்றொன்றில் கூடுதல் மதிப்பெண்ணும் பெற்று இரண்டையும் சேர்த்து மொத்தம் 100 மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க இயலாது என கடந்த ஜனவரி மாதம் 14 ம் தேதி பல்கலை துணைவேந்தர் அறிவிப்பு வெளியிட்டார்.  நான் உடல் இயங்கியல் பாடத்தின் முதல் தாளில் 59 மதிப்பெண்ணும், 2 ம் தாளில் 42 மதிப்பெண்ணும் பெற்றுள்ளேன். மொத்தம் 101 மதிப்பெண் பெற்றிருந்தும் நான் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி இரண்டு பாடத்தையும் மீண்டும் எழுத வேண்டும் என்று பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது சரியல்ல. இதே போன்று ஏராளமான மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பூர்ணசவுத்ரி தனது மனுவில் கூறியிருந்தார்.  மேலும் கடந்த 1997 ல் இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு மதிப்பெண் கணக்கீட்டு முறையை அறிவித்தது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இரண்டு தாள்களிலும் சேர்த்து ஒரு மாணவர் மொத்தம் 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே அவரை தேர்ச்சி பெற்றவராக அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் தற்போதைய அறிவிப்பு அந்த நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது ஆகும். எனவே இதற்கு தடை விதித்து புதிய தேர்வு மதிப்பீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும். எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டில் மாணவர்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று மாணவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.  இதனை விசாரித்த நீதிபதி ராஜா, எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலையின் புதிய தேர்வு மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் மாணவர்களை 2 ம் ஆண்டு வகுப்பில் அனுமதிக்க உத்தரவிட்டார். பல்கலைக் கழக பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, மருத்துவ கல்வி இயக்குனர்,இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்