முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. வினருக்கு பாடம் புகட்டுங்கள்: எஸ்.முத்துமணி

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, அக்.14 - மக்கள் வரிப்பணத்தை கபளீகரம் செய்த தி.மு.க.வினருக்கு பாடம் புகட்டுங்கள் என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், அண்ணா தொழிற்சங்க முன்னாள் இணைச் செயலாளருமான எஸ்.முத்துமணி பேசினார்.

மதுரை அலங்கார் தியேட்டர் அருகில் ஆவின் சந்திரன் தலைமையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் 72 வது வார்டுக்குப் போட்டியிடும் வேட்பாளர் பி.குமார் ஆகியோரை ஆதரித்து அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் இணைச் செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.முத்துமணி கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். 

அப்போது அவர் பேசியது வருமாறு:-

கடந்த 15 ஆண்டு காலமாக தி.மு.க.விடம் இருந்த மதுரை மாநகராட்சி பல்வேறு வகைகளில் சீரழிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின் திட்டங்களான மழைநீர் வடிகால் திட்டம், வைகை குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம், நகர்ப்புற ஏழை வீட்டு வழித்திட்டம் ஆகிய எந்த திட்டமும் தி.மு.க.மாநகராட்சியால் முறையாக முழுமையாக முடிக்கப்படவில்லை. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மேற்கண்ட திட்டங்களின் மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ. 1,800 கோடியாகும். இந்த திட்டங்கள் தொடங்கும் முன்பே இதற்கான கமிஷன் தொகை ரூ. 180 கோடி ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து தி.மு.க.வினர் பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. 

இத்திட்டங்களுக்கான மதுரை மாநகராட்சி தனது பங்குத்தொகையாக 30 சதவீதம் நிதி செலுத்தும்பட்சத்தில் மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 20 சதவீதமும் அளிக்கும். ஆனால் முந்தைய தி.மு.க. மாநகராட்சி தனது பங்கீட்டுத் தொகையை திட்ட வகைக்கு முறையாக செலுத்தாததால் கடந்த 2010 ம் ஆண்டு அக்டோபர் முதல் திட்டப் பணிகள் எதுவும் நடக்காமல் முடங்கிக் கிடக்கின்றன. எந்த பணிக்கும் உரிய தொகையை ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்காமலேயே தி.மு.க. மாநகராட்சிக்கு சென்றுவிட்டதால் ஒப்பந்தக்காரர்கள் நிலுவைத் தொகையை பெற்று வேலையை துவக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதில் பாதிக்கப்பட்டது பொதுமக்கள்தான் என்பதை உணரவேண்டும். 

மேலும் தி.மு.க. மாநகராட்சியில் கீழ்க்காணும் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி குடும்பத்தார்களின் பக்கபலத்தால் மதுரை மாநகராட்சி பொறுப்பிற்கு வந்தவர்களும், தி.மு.க.வினர் சிலரும் சேர்ந்து பினாமி கம்பெனிகளை உருவாக்கி அதன் பெயரில் சுமார் 46 கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்த பணிகள் எடுத்து அதை முழுமையாகவும், முறையாகவும் முடிக்காமல் பெருமளவில் ஊழல் நடந்துள்ளது. மதுரை மாநகராட்சியின் விதிமுறைப்படி ஆண்டு வருவாயில் 49 சதவீதத்திற்குள்தான் எஸ்டாபிளிஷ்மெண்ட் செலவு செய்யப்பட வேண்டும். ஆனால் 70 சதவீதம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பராமரிப்பு பணிகளுக்கு என 1,800 ஒப்பந்த தொழிலாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் மேயர் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கிட்டு இந்த ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்து சம்பளம் பெற்று தங்களது பாக்கெட்டுகளை நிரப்பிக்கொண்டார்கள். வரி சீர்திருத்தம் என்ற பெயரிலும் ஊழல் நடந்துள்ளது. அதாவது தி.மு.க. அரசு வணிகக் கட்டிடங்களுக்கு எல்லாம் ஒவ்வொரு சதவீதம் வரி உயர்வு பெறவேண்டுமென அரசாணை பிறப்பித்து அதனை முறையாக அமுல்படுத்தவில்லை. மாறாக அரசாணையை காட்டியே வணிகக் கட்டிட உரிமையாளர்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு நடுத்தர ஏழை மக்களின் வீட்டு வரியை உயர்த்தி வரிசீரமைப்பு என்ற பெயரில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதுவும் தி.மு.க.வினரின் ஒரு நூதன ஊழலாகும். 

நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டத்தில் மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் தங்களின் பினாமி பெயர்களில் வீடுகளை ஒதுக்கிக்கொண்டுள்ளனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. விரைவில் உண்மைகள் மக்கள் மத்தியில் அம்பலத்திற்கு வரும். கடந்த 15 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 66 பள்ளிகளில் பணியாற்றிவரும் மொத்த ஆசிரியர்கள் 570 பேர்களின் பொது வருங்கால வைப்பு நிதியை வைப்புநிதி அலுவலகத்தில் செலுத்தவில்லை. அங்கேயும் தி.மு.க.வினர் பல்வேறு வகையான ஊழல் செய்ததே இந்த பரிதாப நிலைக்கு காரணமாகும். மாநகராட்சி ஊழியர்களுக்கு பிரதி மாதம் 15 ம் தேதிக்கு முன்பு சம்பளம் வழங்கப்படுவதே இல்லை. முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்பு தமிழ்நாடு அரசால் மதுரை மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்ட ஆணையாளர், முதல்வரின் உத்தரவுப்படி உரிய முறையில் பணிகளை மேற்கொண்டு பிரதி மாதம் 1 ம் தேதியே கடந்த ஜூலை மாதம் முதல் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல் முந்தைய தி.மு.க. மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் 220 பேருக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படாமல் இருந்தது. தமிழக முதல்வரின் ஆணையின்பேரில் மேற்கண்டவர்களுக்கு ஓய்வூதியப் பயன் தொகையாக ரூபாய் இரண்டரைக் கோடி இப்போது வழங்கப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க. அரசின் சாதனையாகும். 

முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தி.மு.க. ரவுடிகளிடம் சிக்கித்தவித்த மதுரை மாநகரம், அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களின் அமைதியான, நிம்மதியான வாழ்வுக்கு வழிவகுத்த முதல்வருக்கு மதுரை மக்கள் தங்கள் நன்றிபெருக்கை காட்டுகின்ற வகையிலும், மதுரை மாநகராட்சியின் அத்துணை அடிப்படை தேவைகளையும் முறையாக நிறைவேற்றிடவும், திட்டப் பலன்களை எவ்வித முறைகேட்டிற்கும் இடமின்றி மக்களுக்கு கொண்டுவந்து சேர்த்திடவும், மதுரை மாநகரத்தின் பண்பாடு, எழில் காக்கப்படவும், மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா மற்றும் 72-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடும் வி.குமார் உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மதுரை மாநகராட்சியை அ.தி.மு.க.விடம் ஒப்படையுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரமணி, வக்கீல் ராமசாமி, சுப்புராம், முருகேசன், குஞ்சார், ராஜேந்திரன், சேகர், மணிகண்டன், அருண், பூப்பாண்டி, ரமேஷ்பாபு, வெங்கடேஷ், பாண்டியன், சிமிண்ட்கடை சண்முகம், சித்திரைச்செல்வன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட அ.தி.மு.க. முன்னணியினர் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் சேகர் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்