முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நதிநீர்ப் பிரச்சனை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.18 - காவிரி நதிநீர்ப் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நதிநீர் ஆணையத்தின் இறுதி உத்தரவை இந்திய கெஜட்டில் வெளியிட நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவு பிறப்பிக் வேண்டும் என பிரதமரை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். காவிரி நதிநீர்ப் பிரச்சனை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு, கர்நாடகம் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட நதிநீர் ஆணையம், தனது இறுதி உத்தரவை பிறப்பித்த பிறகும்கூட கர்நாடகம் அதற்கு அடிபணியவில்லை. தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை ஒழுங்காக தருவதும் இல்லை. 

இந்தநிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினார். பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் ஒரு கடிதமும் எழுதினார். அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுதியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் 80 சதவீத நீர்ப்பாசனத்திற்கு காவிரி நதிநீர்தான் ஜீவநாடியாக இருந்துவருகிறது. காவிரியில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டால்தான் தமிழக மக்களுக்கு உணவு பாதுகாப்பே கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலம் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடகம் விடத் தவறினால் தமிழகத்தின் விவசாயம் மட்டுமல்ல, பொருளாதாரமும் பாதிக்கப்படும். இரு மாநிலங்களிடையே இந்த பிரச்சனை 1960 ல் வெடித்தது. தமிழகத்தின் சம்மதம் இல்லாமல் கர்நாடக அரசு நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த தொடங்கியது. பிறகு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்திய அரசு 1990 ல் காவிரி நதிநீர் தாவா தொடர்பான தீர்ப்பாயத்தை அமைத்தது. இந்த காவிரி நதிநீர் ஆணையம் தனது இடைக்கால உத்தரவை 25.6.1991 ல் பிறப்பித்தது. அது 10.12.1991 ல் இந்திய அரசால் கெஜட்டில் வெளியிடப்பட்டது. பிறகு காவிரி நதிநீர் ஆணையமானது 5.2.2007 ல் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அப்போது கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு தரப்படவேண்டிய தண்ணீரை ஒதுக்கீடு செய்து நதிநீர் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் இதை கர்நாடக அரசும், கேரள அரசும் ஏற்றுக்கொள்ளாமல் இறுதி உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றன. தமிழகமும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. பின்னர் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இந்திய அரசும் தனது கருத்துக்களை எடுத்துவைத்தது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தங்களது மனுக்களை தாக்கல் செய்தன. அவையெல்லாம் தற்போது நிலுவையில் உள்ளன. காவிரி நதிநீர் ஆணையத்தால் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும், அந்த உத்தரவு அமுல்படுத்தப்படவில்லை. மேலும் கர்நாடக அரசு இந்த விஷயத்தில் தான் தெரிவித்துள்ள யோசனையை இறுதி உத்தரவுக்கான சம்மதம் என்று எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது. எனவே இதுபோன்ற சூழ்நிலையில் இந்திய அரசு நதிநீர் ஆணையத்தின் இறுதி உத்தரவை அரசு கெஜட்டில் வெளியிடுவதுதான் நல்லது. அப்போதுதான் இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அதற்கு கட்டுப்பட்டு இறுதி உத்தரவை அமுல்படுத்தும். இந்த விஷயம் தொடர்பாக கடந்த 14.6.2011 அன்று தங்களை நேரில் சந்தித்தபோது நான் மனு கொடுத்தேன். அப்போதே காவிரி நதிநீர் ஆணைய இறுதி உத்தரவை கெஜட்டில் வெளியிடுமாறு நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடும்படி நான் கேட்டுக்கொண்டேன். அதே வேண்டுகோளை இப்போதும் முன்வைக்கிறேன். காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதி உத்தரவை இந்திய கெஜட்டில் வெளியிடுமாறு நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு நீங்கள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்த கடிதத்தின் மூலம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு துரிதமாக நடவடிக்கை எடுத்தால் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!