முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் பிரச்சனை: மத்திய அரசுக்கு முதல்வர் கேள்வி

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, அக்.19 - கூடங்குளம் மக்களின் பிரச்சனைகள் தீரும்வரை அணுமின் நிலைய பணிகளை நிறுத்திவைக்காமல், மாநில அரசின்மீது, மத்திய அரசு வீண்பழி சுமத்துவதா என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு 1988 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.  2001 ஆம் ஆண்டு இந்திய அணு மின் கழகத்தால் பணிகள் துவக்கப்பட்டு, முதல் அணு மின் நிலையத்தின் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும் நிலையில் இருந்தன. 

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் சுனாமியால் ஜப்பானில் உள்ள  ஃபுகுஷிமாவில் உள்ள அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட கதிரியக்கப் பிரச்சனை காரணமாக, இந்திய அணு மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அதிலும் குறிப்பாக, தற்போது பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு  குறித்து அந்தப் பகுதி மக்களின் மனதில் ஐயப்பாடுகள் எழுந்தன.  இதன் காரணமாக கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை உடனடியாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இடிந்தகரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.  மக்களுக்காகத் தான் திட்டங்கள் என்பதில் நான் எப்போதும் உறுதியுடன் செயல்பட்டு வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.  

எனவே, அப்பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணு மின் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படக் கூடாது என்பதில் நான் தொடர்ந்து உறுதியாக உள்ளேன்.  கூடங்குளம் அணு மின் திட்டம் முழுவதும் மத்திய அரசின் திட்டமே ஆகும்.  எனவே இந்த அணு மின் திட்டத்தின் பாதுகாப்பு பற்றிய முழு விவரமும் மத்திய அரசு மற்றும் இந்திய அணு மின் கழகம் ஆகியவற்றுக்குத் தான் தெளிவாகத் தெரியும்.  இந்த அணு மின் திட்டம் பற்றிய கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவது முழுக்க முழுக்க மத்திய அரசின் கடமையே ஆகும்.  

ஆனால், மத்திய அரசு அதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்காததாலும்; அங்கு நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் அந்தப் பகுதி மக்களின் அச்சம் ஆகியவைக் குறித்து தனக்கு சம்பந்தம் இல்லாதது போல் மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்திருந்ததாலும்; 19.9.2011 அன்று நான் பாரதப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினேன்.  அந்தக் கடிதத்தில், கூடங்குளம் பிரச்சனைத் தொடர்பாக பாரதப் பிரதமரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளிப்பதற்கான நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கித் தருவதுடன், அந்தப் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றும் நான் பாரதப் பிரதமரை  கேட்டுக் கொண்டேன்.

அதனை அடுத்து, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர்வி. நாராயணசாமி  20.9.2011 அன்று இடிந்தகரை சென்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை சந்தித்தார்.  எனினும், கூடங்குளம் பகுதி மக்களின் அச்சங்களைத் தீர்ப்பதற்கான  எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை.  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களின் பிரதிநிதிகளை 21.9.2011 அன்று தலைமைச் செயலகத்தில் நான் சந்தித்தேன்.  அந்த சந்திப்பின் போது, இந்தப் பிரச்சனைத் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வைத்தனர்.  அதனை நான் ஏற்றுக் கொண்டு, 22.9.2011 அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது.  

அந்தக் கூட்டத்தில், கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய அந்தப் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு பாரதப் பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்வதென்று அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.  இதனை அடுத்து, 7.10.2011 அன்று,  தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தலைமையிலான தமிழகக் குழு பாரதப் பிரதமரை  டெல்லியில் சந்தித்து, கூடங்குளம் பகுதி மக்களிடம் கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய அச்சம் தீர்க்கப்படும் வரை அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தது. அப்போது, பாரதப் பிரதமர், மத்திய அரசின் பிரதிநிதிகள், மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய கூட்டுக் குழு உருவாக்கப்படும் என்றும், அந்தக் குழு கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சனைக் குறித்து விரிவாக ஆராயும் என்றும் தெரிவித்தார்.  

இருப்பினும், பாரதப் பிரதமர்  அளித்த உறுதிமொழிக்கு ஏற்ப எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு அதன் பின் எடுக்கவில்லை.  மாறாக, 7.10.2011 அன்று தமிழகக் குழுவை சந்தித்த பின்னர், பாரதப் பிரதமரால் எழுதப்பட்ட 4.10.2011 தேதியிட்ட ஒரு கடிதம் 7.10.2011 அன்றே ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.  ஆனால் அந்தக் கடிதம் எனக்கு கிடைக்கப் பெறவில்லை.  எனவே, அந்தக் கடிதத்தின் நகலை  தமிழக அரசு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஊஹஞ் மூலம் 9.10.2011 அன்று கேட்டுப் பெற்றது.  அதன் பின்னர் அந்தக் கடிதம் 10.10.2011 அன்று தான் எனது அலுவலகத்தில் பெறப்பட்டது.  அதன் பின்னர் பாரதப் பிரதமர் மேலும் ஒரு கடிதத்தை எனக்கு எழுதியதாக ஊடகங்களில் 12.10.2011 அன்று செய்தி வெளியிடப்பட்டது.  ஆனால் அந்தக் கடிதம் இதுவரை எனக்குக் கிடைக்கப் பெறவில்லை.   நிலைமை இவ்வாறு இருக்கும் போது, 15.10.2011 அன்று சென்னை வந்த பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி, பாரதப் பிரதமரால் உத்தேசிக்கப்பட்ட குழுவில் இடம் பெற வேண்டிய  மாநில அரசின் பிரதிநிதிகளின் பட்டியலை தமிழக அரசு இன்னமும் அளிக்கவில்லை; எனவே குழு அமைக்க முடியாமல் உள்ளது என்று வேண்டுமென்றே மாநில அரசின் மீது குற்றம் சாட்டி உள்ளார்.  மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறேன்.  நான் ஆட்சியில் இருந்த போதெல்லாம் அன்றைய பிரதமர்களோடு பலமுறை கடித பரிவர்த்தனை நடந்துள்ளது.  இதுவரை எந்தப் பிரதமரும் எனக்கு கடிதம் எழுதியதாகச் சொல்லிக் கொண்டு, அதனை முதலில் ஊடகங்களுக்கு அனுப்பி வெளியிட்டு விட்டு, அதன் பின்னர் கூட எனக்கு அனுப்பாமல் இவ்வாறு செயல்பட்டதில்லை.  ஆனால் கடந்த 10 நாட்களில் இரண்டு முறை இந்தப் புதிய அனுபவம் நிகழ்ந்துள்ளது.

எனவே, கூடங்குளம் பிரச்சனையில் மாநில அரசின் மீது பழி சுமத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே மத்திய அரசு செயல்பட்டு வருகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.  கூடங்குளம் பகுதி மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்பது தான் எனது அரசின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.  ஆனால், மத்திய அரசு அவ்வாறு பணிகளை நிறுத்தி வைக்காத காரணத்தால் தான், கூடங்குளம் பகுதியில் மீண்டும் உண்ணாவிரதம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபடும் நிலைக்கு அந்தப் பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  எனவே, கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், மாநில அரசின் மீது வீண் பழி சுமத்துவதை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்