முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

194 ஊராட்சி ஒன்றியங்கள் 65 நகராட்சிகளுக்கு இன்று தேர்தல்

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.19 - தமிழ்நாட்டில் இன்று 2-வது கட்டமாக 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 பஞ்சாயத்து யூனியன்களில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்கு பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. தமிழகம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் முதல் கட்ட தேர்தல் நடந்தது. 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றிய அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

2-வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாக்குபதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து வாகனங்கள் மூலம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டன. இன்று 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 பஞ்சாயத்து யூனியன்கள் மற்றும் இந்தப்பகுதிகள் அடங்கிய கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடை பெறுகிறது.

இரண்டாவது கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் பகுதிகளில் இரண்டு நாள் முன்பு பிரச்சாரம் ஓய்ந்தது. அந்த பகுதிகளில் பூத்சிலிப் கொடுக்கும் பணி இரண்டு நாளும் மும்முரமாக நடந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு 38 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிக்கான ஊழியர்கள் நேற்றே ஒட்டுச்சாவடிகளுக்கு சென்று தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும்.

ஊரகப்பகுதி வாக்காளர்கள் 4 பதவி இடங்களுக்கு வாக்களிக்க வேண்டும். அதாவது ஊராட்சித்த தலைவர் (இளம் சிவப்பு) ஊராட்சி உறுப்பினர்கள் (வெள்ளை அல்லது நீலம்) ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (பச்சை) மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் (மஞ்சள்) என தனித்தனியாக வாக்களிக்க வேண்டும்.

இன்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அதன் பிறகு ஓட்டுப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். 21-ந் தேதி (வெள்ளி) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காட்டாங்குளத்தூர், குன்றத்தூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாமஸ் மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், மாங்காடு, கூடுவாஞ்சேரி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், சிட்லப்பாக்கம், பெருங்களத்தூர், செம்பாக்கம், திருநீர்மலை, பீர்க்கங்கரணை, மாடம்பாக்கம், குன்றத்தூர் ஆகிய பேரூராட்சிகளுக்கும், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் ஆகிய 3 நகராட்சிகளுக்கும் மறைமலைநகர், அனகாபுத்தூர், பம்மல் ஆகிய 3 நகராட்சிகளுக்கும் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் எஸ்.மனோகரன் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குச்சாவடி முன்பு கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆயுதம் தாங்கிய போலீசார், கர்னாடக மாநில போலீசார், மத்திய போலீசார் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம். அசம்பாவிதங்கள் நடந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மனோகரன் எச்சரித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 2-ம் கட்டமாக ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு, திருத்தணி ஆகிய 4 நகராட்சிகளுக்கு 335 வாக்குப்பதிவு மையங்களிலும், திருநின்றவூர், திருமழிசை, நாரவாரிக்குப்பம் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கு 67 வாக்குப்பதிவு மையங்களிலும், கடம்பத்தூர் (43 ஊராட்சிகள்), பூவிருந்தவல்லி (27 ஊராட்சிகள்). புழல் (7 ஊராட்சிகள்), திருத்தணி (28 ஊராட்சிகள்), திருவாலங்காடு (42 ஊராட்சிகள்), வில்லிவாக்கம்(13 ஊராட்சிகள்) ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களின் 160 ஊராட்சிகளுக்கு 793 வாக்குப்பதிவு மையங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. அந்த பணியை மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சாட்டர்ஜி நேரில் பார்வையிட்டார். மேலும் வாக்குச் சாவடியில் பணிபுரிய உள்ள தேர்தல் அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமிரா பொறுத்தப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற மாவட்டபோலீஸ் சூப்பிரண்ட் வனிதா தலைமையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சாட்டர்ஜி கூறினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 2-ம் கட்டமாக திண்டிவனம் நகராட்சி செஞ்சி, கண்டமங்கலம், கோலியனூர், மயிலம், மேல்மலையனூர், மரக்காணம், ஒலக்கூர், வல்லம் வானூர், விக்கிரவாண்டி ஆகிய 10 ஊராட்சி ஒன்றியங்கள், அனந்தபுரம், செஞ்சி, கோட்டக்குப்பம், மரக்காணம், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடக்கிறது. 2-ம் கட்ட தேர்தலில் 9,87,715 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 2-ம் கட்ட தேர்தலில் பதற்றம் மற்றும் மிகவும் பதற்றமான வாக்கு சாவடிகள் என 400 வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குசாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க மாவட்ட கலெக்டர் மணிமேகலை உத்தரவிட்டுள்ளார். முதல் கட்ட தேர்தலை போன்றே 2-வது கட்ட தேர்தலிலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வினித்தேவ் வாங்கடே மேற்பார்வையில் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நேற்றே தீவிரமாக நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!