தேர்தலில் கறுப்புப்பணம் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.19 - வருகின்ற 5 மாநில சட்டசபை தேர்தலின்போது கறுப்புப்பணம் புழக்கத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்துள்ளார். தேர்தலில் அரசியல் கட்சிகள் செலவு குறித்து கண்காணிப்பு என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை குரேஷி நேற்றுமுன்தினம் டெல்லியில் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அப்போது அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் கறுப்புப்பணத்தை புழக்கத்தில் விடுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கடந்தாண்டு பீகார் மாநிலம் மற்றும் கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழகம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது கிடைத்த அனுபவத்தை வைத்து தற்போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதை தடுக்க நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுக்கத்தொடங்கிவிட்டது. தேர்தலின்போது வன்முறையை குறைக்க தேர்தல் கமிஷன் வழிகாட்டு முறையை அரசியல் கட்சிகள் தங்களின் தொண்டர்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் குரேஷி கூறினார். தேர்தலின்போது அரசியல் கட்சிகள் செலவை குறைப்பதோடு இதுதொடர்பாக தேர்தல் கமிஷன் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் குரேஷி கேட்டுக்கொண்டார். கருத்தரங்கில் உத்திரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளை சேர்ந்த சுமார் 60 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

கடந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் தலைவர்கள் பேசுகையில், தேர்தலின்போது கூடுதல் பணம் செலவழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் தேர்தல் கமிஷனர்கள் வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரமா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: