முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சருக்கு அனுப்பிய 2-வது சம்மன் திரும்பியது

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, அக்.19 - அமைச்சர் கல்யாணசுந்தரம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அனுப்பப்பட்ட 2-வது சம்மனை போலீஸ் அதிகாரியிடம் சட்டசபை செயலாளரின் உதவியாளர் ஒப்படைத்தார். புதுவை அமைச்சர் கல்யாணசுந்தரம் 10-ம் வகுப்பு தனித்தேர்வை திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆள் மாறாட்டம் செய்து எழுதியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய கல்வி அதிகாரிகள் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். 

இதையடுத்து அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது ஆள் மாறாட்ட மோசடி உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் சில பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளாகும். 

இதோடு அமைச்சர் கல்யாணசுந்தரம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 9-ந் தேதி புதுவை சபாநாயகர் சபாபதியை சந்தித்து சம்மன் அளித்தனர். சம்மனை பெற்றுக் கொண்ட சபாநாயகர் சபாபதி இன்னும் 2 நாளில் ஆஜர் ஆவார் என்று உறுதி அளித்தார். 

ஆனால் 11-ந் தேதி அமைச்சர் கல்யாணசுந்தரத்தை கண்டு பிடித்து சம்மனை அளிக்க முடியவில்லை என்று கூறி சட்டசபை செயலக ஊழியர்கள் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் சம்மனை திருப்பி அளித்தனர். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி மாலை விழுப்புரம் போலீசார் சட்டசபை செயலாளர் சிவப்பிரகாசத்திடம் மீண்டும் சம்மன் அளித்தனர். 

இந்த சம்மனில் வருகிற 18-ந் தேதி(நேற்று) மாலை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.  அமைச்சர் கல்யாணசுந்தரம் ஏற்கனவே முன் ஜாமீன் கேட்டு சென்னை ஜகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இதையடுத்து நேற்று அமைச்சர் கல்யாணசுந்தரம் விழுப்புரம் போலீசில் ஆஜர் ஆவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபை செயலாளர் சிவப்பிரகாசத்தின் உதவியாளர் நேற்று பகல் 11 மணியளவில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரிடம் 2-வது சம்மனை திருப்பி கொடுத்தார். அமைச்சர் கல்யாணசுந்தரத்தை சந்திக்க முடியவில்லை எனவே சம்மனை திருப்பி அளிக்கிறோம் என்று அவர் கூறினார். 

அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது? என்பது குறித்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் ஆலோசித்து வருகின்றனர். மேலும் அமைச்சர் கல்யாணசுந்தரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. அதுவரை அமைச்சர் கல்யாணசுந்தரத்தை கைது செய்யக்கூடாது என்று ஜகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்