முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டவர் சாவு

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.20 - கடந்த 17-ந் தேதி சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட தகராறில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் அவரது தம்பியின் மனைவி, மகன்களால் கத்தியால் குத்தப்பட்டு இரும்பு ராடால் அடித்து படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவொற்றியூர் அ.தி.மு.க. பிரமுகரும், ஜெயலலிதா பேரவை தலைவருமான மோகன் நேற்று உயிரிழந்தார். 

இதுகுறித்த விபரம் வருமாறு:-

சென்னை மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 17-ந் தேதி நடந்தது. இதில் திருவொற்றியூர் பகுதியில் கடும் மோதல் வெடித்தது. வாக்குப்பதிவு நாளன்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கள்ள ஓட்டு போடப்படுவதாக இரு தரப்பினரும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு மாலை 5 மணியளவில் அங்குள்ள எர்ணாவூர் ரவுண்டானா அருகே அ.தி.மு.க. பிரமுகர் செல்வமணி, அவரது மனைவி வெண்ணிலா ஆகியோரை ஒரு கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. 

பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பியோடி விட்டது. போலீசார் விரட்டிச் சென்று பிடிக்க முடியவில்லை. கே.வி.குப்பம் கிராமத் தலைவர் அஞ்சப்பனின் தம்பி தான் செல்வமணி ஆவார். இவர்களுக்கும், கே.பி.பி.சாமியின் தரப்பினருக்கும் இடையே நீண்ட வருடங்களாக மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில்தான் கடந்த 17-ந் தேதி இந்த தாக்குதல் நடந்தது. அஞ்சப்பனின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. 

அரிவாள் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடிய செல்வமணியும், வெண்ணிலாவும் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். செல்வமணிக்கு தலையில் 32 தையல் போடப்பட்டுள்ளது. அதேபோல் வெண்ணிலாவுக்கும் முதுகில் தையல் போடப்பட்டுள்ளது. இருவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இதற்கிடையே இந்த மோதல் தொடர்பாக நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் மூத்த மகன் இனியவன், உதவியாளர் நாகேஸ்வரன், ஜெயக்குமார், பாபு, செல்வம், கலையரசன், அருண், வினோத் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். கே.பி.பி.சாமி, அவரது தம்பிகள் சங்கர், சொக்கலிங்கம் ஆகியோரது வீடுகளில் இருந்த கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தாக்குதல் சம்பவத்திற்கு இந்த கார்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே கடந்த 17-ந் தேதி மேலும் ஒரு நபரும் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது பின்னர் தான் தெரிய வந்தது. ஆறுமுகம் என்பவரது மகனான அ.தி.மு.க. பிரமுகர் மோகன்(42) என்பவர் வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன் பலகைதொட்டிக்குப்பம் பகுதியில் முள்புதரில் கிடந்தார். அன்றிரவு 11 மணியளவில்தான் இவரை கண்டுபிடித்துள்ளனர். முள் புதரில் முனகல் சத்தம் கேட்கவே சிலர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது மோகன் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை கண்டு அவரை மீட்டுள்ளனர். திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு அங்கு ஆபத்தான நிலையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார். 

செல்வமணி- வெண்ணிலா தாக்கப்பட்ட இடத்திற்கு அருகில் தான் மோகன் கிடந்த முள் புதரும் உள்ளது. தி.மு.க. கும்பலை சேர்ந்தவர்கள் தன்னை கத்தியால் வயிற்றில் குத்தி, இரும்பு ராடால் விலாவில் அடித்து காயப்படுத்திவிட்டு தப்பி விட்டதாக போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் மோகன் கூறியுள்ளார். இந்த தேர்தல் மோதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது போலீசார் மேலும் 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கே.பி.பி.சாமியின் மற்றொரு மகன் பரசு பிரபாகரன் இதில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் பொறியியல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, கே.பி.சங்கரின் மனைவி கஸ்தூரியும் இந்த பட்டியலில் உள்ளார். இவர்கள் பழவேற்காடு அல்லது நாகப்பட்டினத்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் படை அங்கு விரைந்துள்ளது. 

இந்த இடங்களுக்கு சென்று பதுங்கிக் கொண்டால் போலீசார் பிடிப்பது மிகவும் சிரமம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல சம்பவங்களில் முக்கிய பிரமுகர்கள் இங்குதான் சென்று பதுங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திருவொற்றியூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றது. போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். நடந்த மோதலுக்கு பதிலடியாக எதிர் தரப்பினரை தாக்கும் ஆத்திரத்தில் அ.தி.மு.க.வினர் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு போலீசார் தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.   

கத்தி குத்துப்பட்ட அ.தி.மு.க. 7 வது வார்டு ஜெயலலிதா பேரவை தலைவர் மோகன் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 5.15 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். நுரையீரலில் ரத்த கட்டு பாதிப்பால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி மோகன் இறந்து விட்டார். இவருக்கு மேகலா(28) என்ற மனைவியும், பிரபுதேவா(11), ப்ரீத்தி(10), பிரியதர்ஷினி(8) ஆகிய பிள்ளைகளும் உள்ளனர். மரணம் அடைந்த மோகன் உடலுக்கு சென்னை மாநகராட்சி மேயர் அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி, வேணுகோபால் எம்.பி., 57 வது வட்ட வேட்பாளர் பி.டி.சி.ராஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்