முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.21 - தீபாவளி பண்டிகையின் போது, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆம்னி பஸ் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு, போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு: தமிழகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு, போக்குவரத்துத் துறை ஆணையர்,  இரா. சுடலைக்கண்ணன், இ.ஆ.ப., அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-​

தீபாவளிப் பண்டிகையின் போது கூட்டநெரிசலைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் சில ஆம்னி பஸ் மற்றும் தனியார் பஸ் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரப் பெறுகின்றன.  தீபாவளிப் பண்டிகை நெருங்குவதையொட்டி, இந்த ஆண்டு இதுபோன்ற பிரச்சினைகள் எற்படாமல் தடுப்பதற்காக, தனியார் மற்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன், போக்குவரத்துத் துறை ஆணையர், இரா. சுடலைக்கண்ணன் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தி பல்வேறு அறிவுரைகளை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.

சென்னையில் இருந்து வெளியூருக்குச் செல்லும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் இதுபோல், வேறு ஊர்களிலும்,  தீபாவளிப் பண்டிகையின் போது நியாயமான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றும் அதிக வேகமாக செல்லக் கூடாது என்றும் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதிரியான பண்டிகைக் காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அதிகரிக்கும் போக்குவரத்துத் தேவையை நிறைவேற்ற நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பள்ளி, கல்லுரி மற்றும் தனியார் கம்பெனி பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் தற்காலிக அனுமதிச்சீட்டு பெற்று வாகனங்களை இயக்க தமிழக அரசு தற்போது ஆணை வழங்கியுள்ளது.  இவ்வசதியை பொது மக்கன் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார். மேலும், பஸ்களில் பட்டாசுகளையோ, தீப்பிடிக்கக்கூடிய வேறு பொருள்களையோ ஏற்றக் கூடாது.  அதிக கூட்டத்தை ஏற்றக் கூடாது.  பெர்மிட், தகுதிச் சான்று,  இன்சூரன்ஸ் ரசீது, வரி ரசீது மற்றும் புகை பரிசோதனை சான்று ஆகியவற்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் வாகனத்தை ஓட்டும் போது ஓட்டுனர்கள் மது குடித்திருக்கக் கூடாது.  ஒளியை பிரதிபலிக்கக் கூடிய சிவப்பு பிரதிபலிப்பான்களை வாகனத்தில் ஒட்டியிருக்க வேண்டும்.  வாகனத்தில் சரக்குகளை ஏற்றக் கூடாது.  வாகனத்தில் அவசர கால வழிவகை செய்யப்பட்டு அது அனைத்துப் பயணிகளுக்கும் தெரியும்படி வாகனத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்  அவசரகால வழி உபயோகிக்கும் முறை பற்றி பேருந்து புறப்படும் சமயத்தில் அனைத்து பயணிகளுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் அவசரகால வழி எளிதாக திறக்கக் வடிய நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் வலியுறத்தப்பட்டது.

மேற்கண்ட அறிவுரைகள், ஆம்னி பஸ் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் பொருந்து எனவும் மேலும் விதிமுறைகளை மீறி  இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்