முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர் வெற்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

மதுரை,அக்.22 - மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா 1.73 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரை மாநகராட்சியை அதிமுக கைப்பற்றியது. மதுரை மாநகராட்சி மேயர் பதவி மற்றும் 99 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 9 லட்சத்து 95 ஆயிரத்து 21 பேர்களில் 6 லட்சத்து 33 ஆயிரத்து 150 வாக்காளர்கள் வாக்களித்தனர். மொத்தம் உள்ள  100 வார்டுகளில் 15 வது வார்டு அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ஜெயமணி மரணம் அடைந்ததால் அந்த வார்டில் தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 99 வார்டுகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளராக வி.வி.ராஜன்செல்லப்பா, திமுக வேட்பாளர் பி.பாக்கியநாதன், இ.காங்கிரஸ் வேட்பாளராக ஐ.சிலுவை, தேமுதிக வேட்பாளராக கா.கவியரசு,பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் போட்டியிட்டனர்.

   மதுரை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. மருத்துவ கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் ஆகிய 3 இடங்களில் எண்ணப்பட்டது. ஒவ்வொரு மையத்திலும் வார்டு வாரியாக இந்த வாக்குகள் எண்ணப்பட்டது. அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா ஆரம்பத்திலிருந்தே அதிக வாக்குகளை பெற்று முன்னணி வகித்தார். முதல் சுற்றிலிருந்து இறுதி சுற்று வரை அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா முன்னிலை வகித்தார். மொத்தம் 10 சுற்றுக்கள் வாக்குகள் எண்ணப்பட்டது. முடிவில் அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பா ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 897 ஓட்டுக்கள் அதிகம்  பெற்று அமோக வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா 3 லட்சத்து 12 ஆயிரத்து 226 ஓட்டுக்களை பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பிடித்த திமுக வேட்பாளர் பி.பாக்கியநாதன் 1 லட்சத்து 38 ஆயிரத்து 329 ஓட்டுக்களையும், மூன்றாவது இடத்தை பிடித்த தேமுதிக வேட்பாளர் கா.கவியரசு 88 ஆயிரத்து 788 ஓட்டுக்களையும், நான்காவது இடத்தை பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் ஐ.சிலுவை 22 ஆயிரத்து 904 ஓட்டுக்களையும், 5 வது இடத்தை பிடித்த பிஜேபி வேட்பாளர் டாக்டர்  ராஜேந்திரன் 14 ஆயிரத்து 352 ஓட்டுக்களையும், 6 வது இடத்தை பிடித்த மதிமுக வேட்பாளர் பாஸ்கர சேதுபதி 12 ஆயிரத்து 619 ஓட்டுக்களையும் பெற்றனர்.

   மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வெற்றி பெற்றதாக ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான நடராஜன் அறிவித்தார். இதை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் நடராஜனிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாவட்ட செயலாளர்கள் ஏ.கே.போஸ் எம்எல்ஏ, முத்துராமலிங்கம் எம்எல்ஏ, கே.தமிழரசன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் அ.மா.பரமசிவம், வளர்மதி ஜெபராஜ், மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் எம்பிக்கள் எஸ்.டி.கே.ஜக்கையன், எஸ்.முத்துமணி, மாவட்ட அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி, பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, துணைசெயலாளர் சி.தங்கம், இளைஞரணி செயலாளர் ஷ.ராஜலிங்கம் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து வி.வி.ராஜன்செல்லப்பா ஓட்டு எண்ணிக்கை நடந்த மருத்துவ கல்லூரி மையத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி வெற்றியை கொண்டாடினார்கள். பின்னர் வி.வி.ராஜன்செல்லப்பா கேகேநகர் ஆர்ச் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த தேர்தலில் அதிமுக பெற்ற அமோக வெற்றியின் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மாநகராட்சியை அதிமுக கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago