முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைவரையும் சிரிக்க வைத்த உழைப்பாளி கருப்பசாமி

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.23 - மறைந்த அமைச்சர் கருப்புசாமி பழகுவதற்கு இனியவர். 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை அமைச்சராகவும் இருந்தவர். எளிய கிராமப்புற விவசாயி தோற்றம் கொண்ட அமைச்சர் கருப்புசாமி, தனது சீரான குரல் வளத்தால் மேடையில் எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி புகழ் பெற்றவர். சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். பாடல்களை நேரத்திற்கு தகுந்தாற்போல் பாடுவார். அதை முதல்வர் ஜெயலலிதா மிகவும் ரசித்து சிரிப்பார். 

1996-ல் அ.தி.மு.க. வெற்றி பெற்ற 4 எம்.எல்.ஏ.க்களில் கருப்புசாமியும் ஒருவர். காட்சிக்கு எளியவரான கருப்புசாமி, பழகுவதற்கு இனிமையானவர், எளியவர். விவசாய குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்தாலும் அமைச்சர் என்ற பந்தா எதுவும் இல்லாமல் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வயல் வெளியில் வேலைகளில் இறங்கி விடுவார். தனது வயல் வேலையை தான் பார்க்கிறோம், இதில் என்ன கவுரவ குறைச்சல் என்ற எண்ணம் கொண்டவர். 

கடைசியாக முதலமைச்சர் முன்னிலையில் கால்நடைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அமைச்சர் கருப்புசாமி, 3 நிமிடத்தில் படித்து முடிக்க வேண்டிய பதவி பிரமாணத்தை கவர்னர் சொல்லி முடிப்பதற்குள் கடகடவென்று 1.5 நிமிடத்தில் வாசித்து அரங்கத்தையே கலகலப்பாக்கினார். பதவி ஏற்பு முடிந்தவுடன் குடுகுடுவென்று இளைஞன் போல் துள்ளி குதித்து ஓடியதை பார்த்த முதல்வர் ஜெயலலிதா முதல் அனைவரும் ரசித்து சிரித்தனர். 

அனைவரையும் சிரிக்க வைத்தவர் வாழ்வில் சோகமாய் கேன்சர் எனும் கொடிய நோய் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் மேல் கொண்ட அன்பின் காரணாக முதல்வர் ஜெயலலிதா அவரை இலாகா இல்லாத மந்திரியாக சிகிச்சை முடிந்து வரும் வரை இருக்கட்டும் என்று மந்திரியாக தொடர்ந்து வைத்திருந்தார். 

ஆனால் அவரது எதிர்ப்பார்ப்பையும் பொய்யாக்கிவிட்டு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலிருந்து திரும்பாமலேயே அமைச்சர் மரணமடைந்து விட்டார்.  அவரது மறைவு செய்தியறிந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரது உடலுக்கு மலர் வளயத்தை வைத்து அஞ்சலி செலுத்தி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். அவரது மறைவை தமிழக அரசு துக்க நாளாக கடைபிடிப்பதாக அறிவித்து அவருக்கு முதல்வர் ஜெயலலிதா உரிய மரியாதையை செலுத்தியுள்ளார். அவரது உடல் சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இன்று உடல் அடக்கம் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!