முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா? டெல்லியில் கருணாநிதி முகாம்

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி, அக்.- 24 - தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார். தன் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட இருக்கும் நிலையில் அதன் மீதான தீர்ப்பு வரும்வரை அவர் அங்கேயே முகாமிட்டிருப்பார் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க. தலைவர் கருணாநிதி இரண்டு தினங்களுக்கு முன் டெல்லி சென்றார். டெல்லியில் அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசினார். பிறகு பிரதமர் மன்மோகன்சிங்கையும் அவர் சந்தித்துப் பேசினார். முன்னதாக நேற்று முன்தினம் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழி உள்பட 17 பேர் மீது சி.பி.ஐ. கோர்ட்டில் புதிய குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது புதிய குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில்தான் கருணாநிதியும் டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமரையும், சோனியாவையும் சந்தித்தபோதிலும் கூட அவர்களிடம் கருணாநிதி 2 ஜி. விவகாரம் குறித்து எதைப்பற்றியும் பேசவில்லை என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் கூட கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று எடுத்தக்கொள்ளப்பட இருக்கிறது. இந்த மனு மீதான முடிவு தெரியும்வரை கருணாநிதி டெல்லியிலேயே முகாமிட்டிருப்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கருணாநிதி, திகார் சிறைக்கு சென்று அங்கு தன் மகளை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறியதாகவும் தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ஆ.ராசா மற்றும் கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரையும் அவர் சந்தித்து ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றியதாகவும் தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க. பிரமுகர்களில் ஒருவரான டி.கே.எஸ்.இளங்கோவன், ஒரு மாதத்திற்கு மேலாக தாமதித்து குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். முதலில் செப்டம்பர் 15 க்கு தள்ளிவைத்தார்கள். அதன் பிறகு இப்போதுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். கனிமொழிக்கு ஜாமீன் தருவதா வேண்டாமா என்பது குறித்து கோர்ட்டுதான் முடிவு செய்யவேண்டும் என்று கூறிய அவர், ஜாமீனுக்காக விண்ணப்பம் செய்ததில் கனிமொழி தனது நேரத்தை வீணாக்கவில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும் இந்த விவகாரத்தில் சிக்கிக்கொள்ள காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை. அவர்கள் இதைப்பற்றி வாயையும் திறக்கவில்லை. இருப்பினும் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மட்டும் இதுபற்றி கருத்து தெரிவித்தார். குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டால் முறைப்படி விசாரணை தொடங்குவதாக அர்த்தம் என்று அவர் கூறி நழுவிக்கொண்டார். இருப்பினும் இந்த விவகாரம் கோர்ட்டில் உள்ளது. எனவே இதைப்பற்றி கோர்ட்டுக்கு வெளியே கருத்து சொல்வது உகந்ததாகவோ, சரியானதாகவோ இருக்காது என்றும் அவர் கூறிக்கொண்டார். எது எப்படியோ ஜாமீன் மனுமீது தீர்ப்பு வரும்வரை கருணாநிதி டெல்லியில் முகாமிட்டு இருப்பது உறுதியாகிவிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்