முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் 700 கோடியாவது குழந்தை இந்தியாவில் பிறந்தது

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

மால் (உ.பி.), நவ.1 - உலகின் 700 கோடியாவது குழந்தை இந்தியாவில் பிறந்துள்ளது. இதையடுத்து உலகின் மக்கள் தொகை 700 கோடியை தாண்டி முத்திரை பதித்துள்ளது. உலக மக்கள் தொகை இன்னும் 5 நாட்களில் 700 கோடியை தாண்டிவிடும் என்று கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஐ.நா. சபை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று இந்தியா-பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இந்த 700 கோடியாவது குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவுக்கு அருகில் உள்ள மால் என்ற இடத்தில் வினிதா, அஜய் என்ற தம்பதியினருக்கு அழகான பெண்குழந்தை ஒன்று நேற்று காலை 7.20 மணிக்கு பிறந்து இந்த மாபெரும் அந்தஸ்த்தை பெற்றுள்ளது. 23 வயதான வினிதாவும், அவரது பெண்குழந்தையும் நலமுடன் இருப்பதாக பிளான் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாகேஸ்வரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உலகின் 700 கோடியாவது மனிதராக பிறந்துள்ள இந்த பெண் குழந்தைக்கு நர்கீஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும் பாகேஸ்வரி தெரிவித்தார். இந்த பெண் குழந்தை சமுதாய சுகாதார மையம் ஒன்றில் பிறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதே போல பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்னொரு பெண் குழந்தை நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பிறகு பிறந்துள்ளது.  இந்த இரு குழந்தைகளின் ஜனனத்தை அடுத்து நேற்று உலகின் மக்கள் தொகை 700 கோடியை எட்டிவிட்டதாக ஐ.நா. மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது. 

ஒரு புறம் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டு வரும் வேளையில் பருவநிலை மாற்றம், பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை போன்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உலக மக்களும், உலக நாடுகளும் முன்வர வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கேட்டுக்கொண்டுள்ளார். நமது பூமியில் அதிகம் நெரிசல் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அது உண்மைதான். நாம் இப்போது 700 கோடி மக்களாகியுள்ளோம். அனைவரும் பலனடைய நாம் இந்த ஜனத்தொகையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருவர் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் பான் கி மூன் கேட்டுக்கொண்டார். மக்களுக்காக தீட்டப்படும் திட்டங்கள், செய்யப்படும் முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் 700 கோடி மக்களுக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்