முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல்: இஸ்ரேல் திட்டம்

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

ஜெருசலேம்,நவ.3 - அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஈரான் நாட்டு அணுஉலைகள் மீது விமான தாக்குதல் நடத்த இஸ்ரேல் ரகசியமாக திட்டமிட்டு வருகிறது. மேற்காசியாவில் ஈராக் வலுவுள்ள நாடாக மாறி வந்தது. இதனால் அரபு நாடுகளுக்கு ஆபத்து ஏற்படுவதோடு எண்ணெய் வளத்தையும் ஈராக் சுரண்டிவிடும் என்று அமெரிக்கா கருதியது. இதனையொட்டி சதாம் உசேன் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. அதோடுமட்டுமல்லாது சதாம் உசேனை தூக்கில் போட்டதோடு தனக்கு ஆதரவு அளிக்கும் அரசை ஈராக்கில் அமைத்தது. அதனையடுத்து ஈரான் நாடு அணுசக்தி துறையில் முன்னேறி வருகிறது. இதுதொடர்ந்தால் ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து இதர அரபு நாடுகளை ஈராக் மாதிரி மிரட்டி பணியவைக்கலாம் என்று கருதும் அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டு உதவியுடன் ஈரானில் உள்ள அணுஉலைகளை தாக்கி அழிக்க திட்டமிட்டுள்ளது. 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யா, பாதுகாப்பு அமைச்சர் இகுட் பராக் ஆகியோர் இந்த தாக்குதலுக்கு ஆதரவாக இருப்பதாகவும் பிர அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர்களின் ஆதரவை பெறும் வகையில் பெஞ்சமின் நேதன்யா ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. முதலில் இந்த திட்டத்தை எதிர்த்து வந்த இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் அவிட்கர் லிபர்மேன் இப்போது அதை ஆதரிப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஈரானின் அணுஆயுத திட்டங்கள் குறித்து வரும் 8-ம் தேதி சர்வதேச அணுஆராய்ச்சி அமைப்பு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. அப்போது ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு திட்டங்கள் குறித்து தெளிவாக வெளிவரும் என்று தெரிகிறது. அதனடிப்படையில் ஈரானை தாக்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்யும் என்று கூறப்படுகிறது. இப்போதுள்ள நிலையில் அணுஆயுதம் தயாரிக்க ஈரானுக்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை தேவைப்படும் என அமெரிக்க-இஸ்ரேலிய உளவுப்பிரிவுகள் கருதுகின்றன. இதனால் ஆயுதம் தயாரிப்பை இப்போதே தடுத்து நிறுத்த அதன் அணு ஆராய்ச்சி மையங்களை தாக்கி அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் ஈரான் தனது பெரும்பாலான அணுஆயுத ஆராய்ச்சி மையங்களை பூமிக்கு அடியில் வைத்துள்ளது. மலைகளை குடைந்து மிக ஆழமான இடத்தில் இந்த மையங்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானின் புனித நகரான குவாம் அருகே உள்ள போர்டோ என்ற இடத்தில் மலையை குடைந்து பூமிக்கு அடியில் மிக பாதுகாப்பான இடத்தில் ஈரானின் முக்கிய அணு ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. மின்சார உற்பத்திக்காகவும் புற்றுநோய் சிகிச்சைக்காகவும் அணு ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கே யுரேனியத்தை சுத்தப்படுத்தி வருவதாகவும் ஈரான் கூறுகிறது. மருத்துவ ஆராய்ச்சிக்காக 3.5 சதவீதம் அளவுக்கே சுத்தப்படுத்துவதாக ஈரான் கூறினாலும் 20 சதவீதத்திற்கு அதிகமாக சுத்தப்படுத்தி வருவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றஞ்சாட்டி உள்ளன. அணுஆயுதங்கள் தயாரிக்கத்தான் யுரேனியத்தை அதிக சதவீதத்தில் சுத்தப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஈரான் மீது இஸ்ரேல் தாக்குவதை விட அமெரிக்காவே தாக்குதல் நடத்துவதுதான் சிறந்தது என இஸ்ரேலிய அமைச்சர் மோஷேயா லோன் கூறியுள்ளார். ஆனால் ஈரான் ஏற்கனவே ஏராளமான ஏவுகணைகளையும் ராக்கெட்களையும் உற்பத்தி செய்து குவித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்