அடுத்த மாதம் 21-ம் தேதி திருநள்ளாரில் சனிப் பெயர்ச்சி

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

புதுச்சேரி, நவ.4 - புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து மேற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில். நவக்கிரக நாயகர்களில் ஒருவரான சனி பகவான், ஈஸ்வர பட்டத்துடன் கிழக்கு நோக்கி தனியாக சன்னதி கொண்டு அபயஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். உலகிலேயே சனீஸ்வர பகவான் தனியாக சன்னதி கொண்டிருப்பது திருநள்ளாறில் மட்டுமே. நவக்கிரகங்களில் சனீஸ்வர பகவான் முக்கிய அங்கம் வகிக்கிறார். 

நளமகராஜன் என்ற அரசன் திருநள்ளாறுக்கு வருகை தந்து இங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் புனித நீராடிய பின்னர் இத்திருக்கோவிலில் உள்ள தர்பாரண்யேஸ்வரரை வழிபட்டு சனீஸ்வர பகவானின் அனுக்கிரகம் பெற்றதால் அவரை பீடித்திருந்த தோஷங்களும், துன்பங்களும் விலகியதாக புராண வரலாறு கூறுகிறது. இக்கோவிலுக்கு வந்து அவரை வழிபட்டால் ஒருவரது ஜாதகத்தில் சனியினால் ஏற்படும் தோஷங்களும், துன்பங்களும் குறைவதாக ஐதீகம் உள்ளது. வானவியலின்படி சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 25 ஆண்டுகள் வருகிறது. 

அவ்வாறு சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது இக்கோவிலில் சனி பெயர்ச்சி விழாவாக வெகு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சனி பெயர்ச்சி விழா அடுத்த மாதம் 21 ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 7.51 மணிக்கு சனி பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். வட கிழக்கு பருவ மழை டிசம்பர் மாதம் இறுதி வரை இருக்கும். எனவே சனி பெயர்ச்சி விழாவின் போது பக்தர்களின் கூட்டம் வழக்கம் போன்று இருக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆனாலும் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

சனி பெயர்ச்சி விழாவின் போது பக்தர்கள் பகவானை தரிசனம் செய்வதற்கு வசதியாக இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசைகளின் மீது மழை நீர் ஒழுகாமல் இருக்க பந்தல்களும், மின்விளக்கு வசதிகளும் செய்யப்படவுள்ளது. 

மேலும் கோவிலில் நடைபெறும் பூஜை நிகழ்ச்சிகளை பக்தர்கள் பார்க்கும் வகையில் கியூ வரிசைகளில் ஆங்காங்கே டி.வி. பெட்டிகள் வைத்து நேரடி ஒலி, ஒளி பரப்பும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. மழைக் காலத்தில் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால் பக்தர்களுக்கு பாதுகாப்பான சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது போன்று பக்தர்களுக்கு சுத்தமான சுவையான அன்னதானம் வழங்க வேண்டும் என்பதில் தேவஸ்தான நிர்வாகம் முனைப்புடன் உள்ளது. இதற்காக சனி பெயர்ச்சி விழாவின் போது திருநள்ளாறில் அன்னதானம் செய்ய விரும்புவவ்கள் முன்னதாகவே தேவஸ்தான அலுவலகத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தேவஸ்தானத்தின் உரிய அனுமதியை பெற்றவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சனி பெயர்ச்சி விழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் முதலில் நளதீர்த்த குளத்தில் புனித நீராடி விட்டு அங்குள்ள நளன் கலிதீர்த்த விநாயகர் கோயிலுக்கு சென்று அவரை வழிபட்ட பின்னர் கற்பூரம் காட்டி தேங்காய் உடைத்து வழிபடுவது வழக்கம். தற்போது நளதீர்த்தம், திருநள்ளாறு கோவில் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 5 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு தூர்வாரப்பட்டுள்ளது. 

குளத்தின் படிக்கட்டுகளில் வழுக்காத வகையிலான விசேஷ கிரானைட் கற்கள், பதிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்கட்டுகளில் தண்ணீர் நிற்காத வகையில் படிக்கட்டுகளின் நடுவே தண்ணீர் கீழே வழிந்தோடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குளத்தை சுற்றிலும் இரவை பகலாக்கும் வகையில் சுமார் 15 க்கும் மேற்பட்ட மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. குளத்தை சுற்றிலும் பேவர் பிளாக் எனப்படும் வண்ணக் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. அது போன்று குளத்தை சுற்றிலும் சிமிண்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சனி பெயர்ச்சி விழாவிற்குள் குளத்தை சுற்றி கழிப்பறை வசதிகள், வணிக வளாகம் உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதால் தேவஸ்தானம் சார்பில் குளத்தை சுற்றிலும் 100 தற்காலிக கழிப்பறை வசதிகள் செய்து தரப்படவுள்ளன. 

அது போன்று பெண்கள் உடை மாற்றும் அறைகளும், குடிநீர் வசிகளும் செய்யப்படவுள்ளது. சனி பெயர்ச்சி விழாவின் போது நளதீர்த்த குளத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்பதால் புதிதாக தண்ணீர் விடப்பட்டு தொடர்ந்து 24 மணி நேரமும் ஒருபுறம், அசுத்த தண்ணீர் வெளியேறுவதற்கும் மற்றொரு புறம் புதிதாக தண்ணீர் விடுவதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு அடுத்து இந்த நளதீர்த்தக் குளத்தில் தான் ஒரே இடத்தில் மிகவும் அதிகளவு கூட்டம் இருக்கும் என்பதால் இதனை பயன்படுத்தி பிக்பாக்கெட், திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க குளத்தை சுற்றிலும் 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து கேமரா மூலம் தீவிரமாக கணகாணிக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அதுபோன்று கோவில் உள்ளே மற்றும் வெளியே 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்தப்பட்டு பக்தர்களின் கூட்டம் கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால் கோவில், குளம் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கலை பொருத்தி கண்காணிக்கப்படவுள்ளது. அது போன்று வெளிஊர்களிலிருந்து பக்தர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் ஆங்காங்கே வாகனங்கள் பார்க்கிங் வசதி, தடையற்ற மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் உள்ளூரில் சாலைகளை மேம்படுத்தும் பணிகளும் தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்: