முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் சந்தர்பால் அபார சதத்தால் மீண்டது வெஸ்ட் இண்டீஸ்

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.- 7 - இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக ரன்களை சேர்த்தது. சிவ்நரைன் சந்தர்பாலின் அபார சதம் வெஸ்ட் இண்டீஸ் அணியை சரிவில் இருந்து மீட்டது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்  அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று துவங்கியது. இந்திய அணியில் அறிமுக வீரர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோர் களமிறங்கினர். டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியின் துவக்க வீரர்களாக இளம் கிரைக் பிராத்வைட்டும்,  கைரன் பவெலும் களமிறங்கினர். இவர்கள் இந்திய பந்துவீச்சை துவக்கத்தில் சமாளிக்க திணறினர். வேகப்பந்து வீச்சாளர்கள் ரன் வேகத்தை மட்டும் கட்டுப்படுத்தினாலும் விக்கெட் விழாததால் தோனி சுழல் பந்துவீச்சை அறிமுகப்படுத்தினார். இதனால் 12 வது ஓவரை வீசிய ஓஜா, எல்.பி.டபிள்யூ. முறையில் பவெலின் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து எட்வர்ட்ஸ் களமிறங்கினார். இவர் கடந்த வங்கதேச சுற்றுப்பயணத்தில் சதமடித்தவர். இவரும் ரன் எடுக்க திணறினார். இவரையும் ஓஜாவே காட் அண்ட் போல்டு முறையில் அவுட் ஆக்கினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 23.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இப்பொழுது துவக்க வீரருடன் அதிரடி வீரர் பிராவோ ஜோடி சேர்ந்தார். உணவு இடைவேளையின்போது வெ.இண்டீஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்களை எடுத்திருந்தது. உணவு இடைவேளை முடிந்த சிறிது நேரத்திலேயே அணியின் எண்ணிக்கை 72 ஆக இருந்தபோது ரவிச்சந்திரன் அஸ்வினின் அற்புதமான பந்து பிராவோவை ஏமாற்றி ஸ்டம்பைத் தாக்கியது. இதனால் பிராவோ 12 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக அனுபவ வீரர் சிவ்நரைன் சந்தர்பால், பிராத்வைட்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடியது. 37 வயதான சந்தர்பாலும், 19 வயதான பிராத்வைட்டும் அருமையாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். துவக்க வீரர்கள் மந்தமாக விளையாடி ரன் எண்ணிக்கையை உயர்த்தாத  நிலையில் இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை பதம் பார்த்தது. 41.5 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்களை கடந்தது. இந்த இருவரின் அபார ஆட்டத்தால்  வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் ரேட் உயர்ந்தது. இந்த ஜோடி 37 ஓவர்கள் ஜோடி சேர்ந்து விளையாடி 108 ரன்களை சேர்த்தது. இந்நிலையில் இந்த ஜோடியை பிரித்த பெருமை ஓஜாவைச் சேர்ந்தது. 212 பந்துகளை சந்தித்து 63 ரன்களை எடுத்திருந்த பிராத்வைட், ஓஜாவின் அற்புதமான பந்தில் விக்கெட் கீப்பர் தோனியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 180 ரன்களை எடுத்திருந்தது. அடுத்ததாக சாமுவேல்ஸ் களமிறங்கினார். இவரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தபோது அஸ்வின் வீசிய பந்தில் 15 ரன்கள் எடுத்திருந்த சாமுவேல்ஸ், விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

இந்த கேட்சை பிடித்ததன் மூலம் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக சையத் கிர்மானி டெஸ்ட் போட்டிகளில் 198 கேட்ச்களை பிடித்ததே சாதனையாக இருந்துவந்தது. 62 டெஸ்ட் போட்டிகளை விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார் மகேந்திரசிங் தோனி. உலக அளவில் இந்த சாதனையை படைத்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் தோனி 13 வது இடத்தை பிடித்தார். 521 கேட்சுகளை பிடித்த தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் இந்த வரிசையில் முதலிடத்தில உள்ளார். 

சாமுவேல்சுக்குப் பிறகு கார்ல்ட்டன் பாவ், சந்தர்பாலுடன் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் அற்புதமாக விளையாடிய சந்தர்பால் தனது 24 வது சதத்தை நிறைவு செய்தார். இது இந்தியாவுக்கு எதிராக சந்தர்பால் அடிக்கும் 7வது சதமாகும். மேலும் அதிக சதமடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வரிசையில் விவியன் ரிச்சர்ட்சுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். பிரைன் லாரா 34 சதங்களையும், கேரி சோபர்ஸ் 26 சதங்களையும் அடித்துள்ளனர். 

ஆட்டநேர  முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 91 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்திருந்தது. சந்தர்பால் 111 ரன்களுடனும், பாவ் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் ஓஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட்டைக்கூட நேற்று வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago