முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தை தகர்க்க லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் திட்டம்

புதன்கிழமை, 9 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.-  9 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை- சேப்பாக்கம் ஸ்டேடியம்  உட்பட இந்தியாவின் முக்கிய 8 ஸ்டேடியங்களில் சிலவற்றில் பாகிஸ்தானின் லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதையடுத்து சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அதிரடிப்படை வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்த விபரம் வருமாறு:-

உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும் ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றன. அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-​ந்தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.   இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்பட 8 நகரங்களில் இந்த போட்டி நடந்து வருகிறது. இந்த 8 மைதானங்களில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு மைதானங்களில் தற்கொலை தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்​இ​தொய்பா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதை உளவு நிறுவனங்கள் கண்டுபிடித்து எச்சரித்தன. லஷ்கர்​இ​தொய்பா தீவிரவாதி ஜெய்புதீன் அன் சாரியும், அவனது கூட்டாளிகளும் கடந்த ஆண்டு இந்தியா வந்து நோட்டமிட்டு சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இஸ்ரேல் உளவுத் துறையும் உலக கோப்பை கிரிக்கெட்டை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகளில் சிலர் ஊடுருவி உள்ளனர் என்று எச்சரித்தது.

இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், லஷ்கர்​இ​தொய்பா தீவிரவாதிகள் ஆமதாபாத்தில் உள்ள சர்தார்படேல் ஸ்டேடியம், பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம், சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் ஆகிய 3 ஸ்டேடியங்களைத் தகர்க்க குறி வைத்திருப்பது தெரிய வந்தது. உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள 8 ஸ்டேடியங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும்படியும், உஷாராக இருக்கும்படியும் தமிழக அரசை மத்திய உள் துறை தற்போது அறிவுறுத்தி உள்ளது. இதன் முலம் சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு அதிக தாக்குதல் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.

சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வருகிற 16 மற்றும் 20-​ந்தேதிகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 16-​ந்தேதி நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்தும் மேற்கு இந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன. 20-​ந்தேதி நடக்கும் போட்டியில் இந்தியாவும், மேற்கு இந்திய தீவுகள் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், அந்த ஆட்டமும் சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.   தீவிரவாதிகள் மிரட்டலைத் தொடர்ந்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வழக்கமாக இங்கு நடக்கும் போட்டிகளில் 500 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் சுமார் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீவிரவாதி அன்சாரி, இந்தியாவில் உள்ள முஜாகி தீன்களை ஸ்டேடியத்துக்குள் அனுப்பி, ரசாயண கலவைகளை சேர்த்து நாச வேலைக்கு முயற்சி செய்யலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

எனவே சேப்பாக்கம் மைதானத்துக்கு வரும் பார்வையாளர்கள் கைப்பை, குளிர்பானங்கள் எடுத்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. போட்டி நடக்கும் நாட்களில் 36 மணி நேரத்துக்கு முன்பு இருந்தே ஸ்டேடியமும் அதன் நான்கு புற சாலைகள் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும்.   பார்வையாளர்களை சோதித்து உள்ளே அனுப்பும் பணியில் கமாண்டோ படை வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். 16 நுழைவாயில்களிலும் பாஸ் உள்ளவர்கள் மட்டுமே மைதானத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஸ்டேடியத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் சோதிக்கப்படும். போட்டி தொடங்கும் முன்பு ஸ்டேடியத்தை சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் 4 வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். கார்களில் வருபவர்கள் அந்த கார் எண்ணுடன் கொடுக்கப்பட்டுள்ள பாஸ் ஒட்டி இருந்தால்தான் பார்க் கிங் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மைதானம் முழுவதையும் தெளிவாக கண்காணிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஒரு காமிரா அறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் சென்னை போலீஸ் அதிகாரி ஒருவரும் அமர்ந்து பார்வையாளர்களை கண்காணிப்பார். இவை தவிர அவசர தேவைக்காக மைதானத்தில் 100 அதிரடிப்படை வீரர்களும் தயார் நிலையில் இருப்பார்கள். சந்தேகப்படும் நபர்களிடம் முழு அளவில் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறினார். சேப்பாக்கம் அருகில் உள்ள லாட்ஜுகளில் அதிரடி சோதனைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சென்னை துணைக் கமிஷனர் சாரங்கன், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் மயில்வாகனன், உதவிக் கமிஷனர் தமிழ்ச் செல்வன், இன்ஸ்பெக்டர் பாண்டி தலைமையில் போலீசார் செய்துள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்