முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்:ராமதாஸ்

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.- 10 - தமிழக மீனவர்களை பாதுகாக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி போராட்டம் நடத்த வேண்டும் என் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கச்சத்தீவையொட்டிய பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் ஒரு கொடிய தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். தமிழக மீனவர்களின் படகுகள் மீது இலங்கைப் படையினர் தங்களது படகுகளை கொண்டு மோதியதுடன் கற்கள், உருட்டுக் கட்டைகள், கண்ணாடி பாட்டில்கள் ஆகியவற்றைக் கொண்டு தாக்கியதில் பல மீனவர்கள் காயமடைந்துள்ளனர். இது கடந்த 3 நாட்களில் நடத்தப்பட்ட 2-வது தாக்குதல் ஆகும். இத்தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த ஜூன் மாதம் முதல் தமிழக மீனவர்கள் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தொடங்கியதிலிருந்து இன்றுவரை அவர்கள் மீது சிங்கப்படையினர் 20-க்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.  கடந்த சில மாதங்களில் பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நான்கிற்கும் மேற்பட்ட முறை கடிதம் எழுதிய போதிலும் அதன் மீது எந்த நடவிக்கையும் எடுக்கப்படவில்லை. மீனவர் பிரச்சினைக்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதால் எந்த பயனும் இல்லை என்று ஏற்கனவே நான் பலமுறை கூறியுள்ளேன். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தேசிய பிரச்சினைக்காக கருத வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்திய போதிலிலும் மத்திய அரசு அதை கண்டு கொள்ளவில்லை. மாறாக இலங்கை கடற்படையினருக்கு உதவிகளை வழங்குவது, கூட்டப்பயிற்சி நடத்துவது, காமன் வெல்த் மாநாட்டை நடத்த உதவுவது என இலங்கை அரசுக்கு ஏராளமான சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இத்தகைய சூழலில் மீனவர்களைக் காக்க முதல்வர் கடிதம் எழுதிக்கொண்டே இருக்கப்போகிறாரா? அல்லது கடுமையான நிலைபாட்டை மேற்கொள்ளப்போகிறா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதால் எந்தப் பயனும் ஏற்படாது என்பதை புரிந்து கொண்டு, தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிகளுடன் கலந்து பேசி மக்களைத் திரட்டி போராட முதலமைச்சர் முன்வரவேண்டும்.

மேலும் கிராமப்புறங்களில் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிடட் பணிகளை மக்கள் நலப்பணியாளர்கள்தான் செய்து வந்தனர். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் மக்கள் நலப் பணிகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. எனவே மக்களின் நலனையும், மக்கள் நலப் பணியாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு 12 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்யும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்