முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதி - தா.பாண்டியன்

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.- 10 - உர விலையை உயர்த்தியுள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நாயக் பவனில் நடைபெற்றது. மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் இரா.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் மாநிலத் துணைச் செயலாளர்கள், சி.மகேந்திரன், கோ பழனிச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எம்.கோபு, இரா.முத்தரசன், எஸ்.எஸ்.தியாகராஐன், க.சுப்பராயன், வே.துரைமாணிக்கம், த.ஸ்டாலின் குணசேகரன், பி.சேதுராமன், மு.வீரபாண்டியன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு: பருவ மழையின் தீவிரத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உயிர் இழப்புக்களும், பலமான பொருள் சேதாரங்களும் ஏற்பட்டுள்ளன. திருப்nullர் பகுதியில் மிக அதிகமான உயிர் இழப்புக்களும் பொருள் சேதாரங்களும் ஏற்பட்டுள்ளன. இது குறித்து இன்னும் முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பல குடும்பங்களில், குடும்ப உறுப்பினர்களை காணவில்லை என்ற புகார்கள் பரவலாக எழுந்துள்ளன. மாநில அரசு இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, உயிரிழப்பு மற்றும் பொருள் சேதாரம் பற்றி முழு விபரத்தையும் வெளியிட வேண்டும். இது இயற்கையின் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்ற முறையில் மாநில அரசோடு மத்திய அரசும்  இழப்பை ஈடுகட்ட தன் பங்கை செலுத்தவேண்டும். எனவே மத்திய மாநில அரசுகள் இணைந்து நின்று இந்த இழப்பை ஈடுகட்ட வேண்டும். உயிரிழப்பு ஏற்பட்ட ஒவ்வொரு நபரின் குடும்பத்திற்கும் 5 லட்சம் ருபாய் வழங்க வேண்டும்.  கடந்த அக்டோபர் மாதம் முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி அனைத்து வகை உரங்களின் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக காம்ப்ளக்ஸ் உரம் மூட்டை ஒன்றுக்கு ருபாய் 350லிருந்து ருபாய் 750ஆகவும், டீ.ஏ.பி உரம் ருபாய் 485லிருந்து ருபாய் 970ஆகவும் பொட்டாஸ் உரம் மூட்டை ஒன்றுக்கு ருபாய் 230லிருந்து ருபாய் 565ஆகவும் உயர்ந்துள்ளன. உரக் கம்பெனிகளே உரங்களுக்கான விலையை தீர்மானித்துக் கொள்ளலாமென்று மத்திய அரசு அனுமதித்ததால் உரக் கம்பெனிகள் விருப்பத்திற்கேற்ப விலையை உயர்த்தியுள்ளன. இது வண்மையான கண்டனத்துக்குறியது. மேலும் நெல் உள்ளிட்ட தானியங்களுக்கான அரசின் விலை அறிவிப்பு கட்டுபடியாகக் கூடியதாக இல்லை. இந்த நிலையில் உரங்களின் விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்யவேண்டுமென்றும் தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மக்கள் நலப்பணியாளர்கள்  பணிnullநீக்கத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். இந்தப்பணி அவசியமல்ல என அரசு கருதுமேயானால், இப்பணியாளர்களை அரசின் இதரத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களில் அவர்களது அனுபவம் கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணிகளில் அமர்த்த நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கின்றது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆம்னி பேருந்துகள் விருப்பம்போல் கட்டணங்களை உயர்த்தி உள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து அமைப்புகள் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தியிருப்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வின் விளைவு இது என்று கூறப்படுகின்றது. இது மத்திய அரசின் கொள்கை என்று கூறியபோதிலும் மத்திய மாநில அரசுகளின் வரியும் ஒரு காரணமாகும். எனவே மத்திய மாநில அரசுகள் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரியைக் குறைக்க வேண்டும். பேருந்துக் கட்டண நிர்ணயிப்பை அரசு தனது கட்டுப்பாட்டிலிருந்து நிறுவனங்களிடம் விட்டுவிடுவது சரியல்ல. இதனை மாநில அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்