முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற போலீசாருக்கு அறிவுரை

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.11 - சாலை விபத்துக்களை தடுக்க மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று நவீன கருவிகளை வழங்கி, போலீசாருக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (10.11.2011) தலைமைச் செயலகத்தில், சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை பணிகளுக்காக சாலை விபத்து விசாரணை வழிமுறையை தொடங்கி வைத்து துல்லியமான கோள நிலைப்பாடு விபரங்கள் அடங்கிய விபத்து நடந்த சம்பவ இடத்தின் படத்தை பிடிக்கக்கூடிய கையடக்ககருவிகளையும், புதிய இடைமறிப்பு வாகனங்களையும் போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கினார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை, உலக வங்கி திட்டத்தின் கீழான தமிழ்நாடு நகர வளர்ச்சி திட்ட நிதியின் மூலம் சாலை விபத்து விசாரணை வழிமுறை என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழிமுறையானது துல்லியமான கோள நிலைப்பாடு விபரங்கள் அடங்கிய விபத்து நடந்த சம்பவ இடத்தின் படத்தை பிடிக்கக்கூடிய கையடக்ககருவியின் உதவியுடன் செயல்படுகிறது.  இந்த விசாரணை வழிமுறையானது அவசர காலப் பணிகளான ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் மருத்துவமனைகளுடன் விரைந்த ஒத்துழைப்புடன் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி மற்றும் சிகிச்சை அளிக்க உதவும்.  பதிவு செய்யப்பட்ட விபத்து விபரங்களை உபயோகித்து கோள தகவல் முறை உருவாக்கி அதன் மூலம் விபத்து விபரங்களை நகரத்தின் எண் வரைபடத்தில் குறிக்கப்பட்டு இந்த விபரங்களை ஆய்வு செய்து போக்குவரத்தினை திட்டமிடவும், நிர்வகிக்கவும் உபயோகிக்கப்படும்.  

இவ்வழிமுறையானது சாலை விபத்துக்களின் விசாரணைக்கும், நீதிமன்றங்களின் வாயிலான சட்டர்வ நடவடிக்கைகளுக்கும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவி மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும்.  இந்த விசாரணை முறையானது விபத்திற்கு முன்பும் பின்பும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை முழுமையாக இணைத்து செயல்படுவதுடன் மாநில போக்குவரத்து திட்ட பிரிவுக்கும் உதவிகரமான தொடர்பினை கொண்டு இருக்கும்.

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கென வேகக் கதிர் துப்பாக்கிகள் மற்றும் சுவாச ஆய்வுக் கருவிகள்  ஆகியவை பொருத்தப்பட்ட காவல் இடைமறிப்பு வாகனங்கள்  வாங்கப்பட்டுள்ளது.  இந்த வாகனங்கள் அதிகமான சாலை விபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய அதிவேகம், குடி போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து குற்றங்களைக் கண்டு பிடித்தல் மற்றும் தடுத்தல் மூலம் சாலை விபத்துக்களை தவிர்த்திடவும் விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும் பயன்படும்.  மேற்கண்ட சாலை விபத்து விசாரணை வழிமுறை மற்றும் காவல் இடைமறிப்பு வாகனங்கள் ஆகிய இரண்டு திட்டங்களும் தனியார் நிறுவனத்தின் மூலம் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில், சாலை விபத்து விசாரணை வழிமுறையை தொடங்கி வைத்து துல்லியமான கோள நிலைப்பாடு விபரங்கள்  அடங்கிய விபத்து நடந்த சம்பவ இடத்தின் படத்தை பிடிக்கக்கூடிய கையடக்ககருவிகளையும், புதிய இடைமறிப்பு வாகனங்களையும் போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகளையும் வாகனங்களையும் நல்ல முறையில் பயன்படுத்தி சாலை விபத்துக்களை தடுத்து பொது மக்களுக்கு சிறப்பான வகையில் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர், சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்