முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கோட்டை - கோவை இடையே புதிய ரயில் இயக்கப்படுமா?

சனிக்கிழமை, 12 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

ஸ்ரீவில்லி, நவ. - 12 - ரயில் பயண சேவை என்பது சமுதாய ஒற்றுமையை எடுத்துக் காட்டுவதாகும். ஜாதி, மதம், இனம், மொழி மறந்து மக்கள் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும், தங்களுக்குள் வேற்றுமைகளை மறந்து பயணம் செய்ய இந்த ரயில் பயணம் பெரிதும் உதவுகிறது.  தென் ஆப்பிரிக்காவில் பிரிட்டானியாவும், தேசப் பிதா மகாத்மா காந்தியும் ரயிலில் செல்லும் போது வெள்ளையர்கள் அவரை ரயிலில் பயணம் செய்யக் கூடாது எனக் கூறி அடித்து துரத்தும் சம்பவமும், மணியாச்சியில் தியாகி வாஞ்சிநாதன், தூத்துக்குடி கலெக்டர் ஆஷ்துரையை அவரது மனைவியர் கண் எதிரே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்ட சம்பவமும் நமது நினைவை விட்டு அகலுவது இல்லை. அந்தளவுக்கு வெள்ளையர் அமைத்த ரயில் நமது வாழ்க்கையில் ஒன்றி இருந்து வருகிறது. ஆனால் சுதந்திர இந்தியாவில் ரயில் சேவை என்பது வட மாநிலங்களை காட்டிலும், தென்னிந்தியாவில் சவலைப்பிள்ளையாக இருப்பது தெள்ளத் தெளிவாகும். தமிழகத்தில் மத்திய ரயில்வே துறையின் பங்கு மாற்றான்தாய் மனப்பான்மையாக இருப்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியாகும். உலக நாடுகள் ஒலியின் வேகத்தை ஒப்பிட்டு புல்லட் ரயில், சுரங்க ரயில் என அதிவேக ரயிலை செலுத்தி முன்னேறி வரும் வேளையில்தான் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சுதந்திரம் பெற்று 50 வருடங்களுக்கு பின்னால் அகல ரயில் பாதையை பார்த்தது. அதுவும் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஆமை வேகத்தில் அகல ரயில் பாதை பணி நடந்து வருகிறது. ஆனால் அதன் பிறகும் கடந்த 25 வருடமாக சென்ற ரயில்கள்தான் கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை போன்ற தமிழக கடைக்கோடி நகரங்களில் இருந்தும் செல்கிறது.  தமிழ்நாட்டை சேர்ந்த தி.மு.க. மத்திய அரசு கூட்டணியில் இருந்தும் கடந்த காலத்தில் தமிழகத்திற்கு எந்தவித நன்மையும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதே போல் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செங்கோட்டை - கோவை ரயில் சேவை ஆகும். விருதுநகரில் இருந்து செங்கோட்டைக்கு இருப்பு பாதை அமைக்கப்பட்டு ரயில் விடப்பட்டது.  அதிலும் குறிப்பாக, வைகோ சிவகாசி எம்.பியாக இருந்த சமயம்தான் விருதுநகர் தென்காசி அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு பின்னர் அது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. இதில் செங்கோட்டை தமிழகத்தின் எல்லையாகும். இந்த 2 பெரிய ஊர்களை இணைக்கும் ரயிலை இயக்கினால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என்பதுதான். இந்த செங்கோட்டை - கோவை ரயில் வேண்டி பொதுமக்கள் பலர் பலமுறை நீண்ட வருடமாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்தும் அது நிறைவேற்றப்படவில்லை. செங்கோட்டை - கோவை ரயிலை இயக்கினால் பொதுமக்களுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் என்ன நன்மை என்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.  செங்கோட்டை தமிழக எல்லை நகரம். இங்கிருந்துதான் கேரளா செல்ல முடியும். சபரிமலை செல்வதற்கு நுழைவாயில் இதுதான். தொடர்ந்து தென்காசி. இங்கிருந்துதான் குற்றாலம் செல்ல முடியும். மேலும் ராஜபாளையம் ஒரு வர்த்தக நகரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆன்மீக நகரம், சிவகாசி, விருதுநகர் தொழில் நகரங்கள். அதைத் தொடர்ந்து திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகியவை முறையே தொழில் நகரங்களாகும்.  மேற்குறிப்பிட்ட நகரங்களை இணைக்கும் வகையில் ரயிலை இயக்கினால் குறிப்பாக, தொழில் வளம், சுற்றுலா பெருகும். மேலும் குறிப்பாக, செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவை, திருப்பூருக்கு செல்லும் போது பஸ்சை எதிர்பார்க்காமல் ரயிலில் மிக குறைந்த கட்டணத்தில் சொகுசாக பயணம் செய்ய முடியும். அதே போல் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய பெரிய நகரை சேர்ந்த மக்கள் சுற்றுலா செல்ல இந்த ரயில் சேவையை பெரிதும் பயன்படுத்த முடியும். தற்போது மேற்குறிப்பிட்ட ஊர்களில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் செலுத்தி அவதியுடன் பயணம் செய்கின்றனர். பயண நேரமும் அதிகமாகிறது. எனவே பொதுமக்கள், தொழிலதிபர்கள், சுற்றுலா பயணிகள், சபரிமலை பக்தர்கள் நலன் கருதி செங்கோட்டை - கோவை புதிய ரயிலை மத்திய அரசு உடனடியாக இயக்க வேண்டும். இந்த கோரிக்கைக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்களா? இந்த ரயில் திட்டம் அமலுக்கு வருமா? இந்த செங்கோட்டை - கோவை ரயில் திட்டம் நிறைவேற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்