காஷ்மீர் மாநில சட்டசபையில் பாரதீய ஜனதா வெளிநடப்பு

புதன்கிழமை, 9 மார்ச் 2011      அரசியல்
BJP MLA Ashok Khajuria 0

 

ஜம்மு, மார்ச் - 9 - ரேஷன் பொருட்கள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி காஷ்மீர் மாநில சட்டசபையில் நேற்று பாரதீய ஜனதா கட்சி வெளிநடப்பு  செய்தது. இக்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்களும் சபையிலிருந்து வெளிநடப்பு  செய்தனர். காஷ்மீர் மாநில சட்டசபையில் நுகர்வோர் விவகாரம் மற்றும்  பொது வினியோகத்துறை அமைச்சர் அலி அக்கூன் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  ஜம்மு டிவிசனில் மாதந்தோறும் 27,011 டன் உணவு தானியங்கள் ரேஷன் கடைகள் மூலம் வினியோகம்  செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆனால் அமைச்சரின் இந்த  தகவல் தவறானது என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.  அசோக் கஜூரியா குற்றம்சாட்டினார்.

மேலும் பொது வினியோகத்திட்டத்தில் உணவு தானியங்கள் வழங்கப்படுவதில்  பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் இதற்கு அமைச்சர் தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்றும் கஜூரி கேட்டுக்கொண்டார்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் இந்த குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்தார். 

அமைச்சரின் பதில் திருப்தி அளிக்காததால்  பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சபையிலிருந்து வெளிநடப்பு  செய்தனர்.

இவர்களுடன்  தேசிய சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

அமைச்சருக்கும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கும் இடையே நடந்த இந்த விவாதத்தின் போது சபையில் சிறிது நேரம் கூச்சல்  குழப்பம் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: