ஸ்ரீகிருஷ்ணா கமிட்டிக்கு மத்திய அரசு செய்த செலவு ரூ.20 கோடி

புதன்கிழமை, 9 மார்ச் 2011      அரசியல்
Justice (retd) B N Srikrishna

 

புதுடெல்லி, மார்ச் - 9 - தெலுங்கானா பிரச்சனை தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டிக்கு மத்திய அரசு செய்த செலவு ரூ. 20 கோடி. ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி கோரிக்கை எழுப்பி கடந்த 2009 ம் ஆண்டு மிகப் பெரிய போராட்டங்களை நடத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கலாமா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கடந்த 2010 பிப்ரவரி 3 ம் தேதி கமிட்டி ஒன்றை மத்திய அரசு அமைத்தது. 

இந்த கமிட்டி சமீபத்தில் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக 6 விதமான யோசனைகளை இந்த கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரைகளை எதிர்கட்சி தலைவர்கள் மிகவும் உன்னிப்பாக படிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார். அந்த அளவுக்கு குழப்பமான ஒரு அறிக்கை கமிட்டியால் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த கமிட்டிக்கு இதுவரை செய்யப்பட்ட செலவு ரூ. 20 கோடி என்று லோக்சபையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் குருதாஸ் காமத் தெரிவித்தார். 

கடந்த 4 ம் தேதிவரை எடுக்கப்பட்ட கணக்கின்படி ரூ.20 கோடியே 15 லட்சத்து 86 ஆயிரத்து 242  இந்த கமிட்டிக்காக செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: