முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புழலில் பரிதாபம் கிணற்றில் தவறிவிழுந்து 4 வயது சிறுமி பலி

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ. 13-  புழலில் 40 அடி கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். அவளது சடலத்தை பார்த்து தாய், உறவினர்கள் கதறி அழுதனர். நேற்று காலை நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.புழல் காவாங்கரை அழகிரி தெரு செக்போஸ்ட் பின்புறம் வசிப்பவர் பிரேம்குமார். தனியார் விளம்பர கம்பெனியில் பணியாற்றி வருகிறார். மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு ராஜலட்சுமி (8), சந்தியா (6), ஆர்த்தி (4), அஞ்சலி (1) ஆகிய 4 மகள்கள் இருந்தனர். அஞ்சலி தவிர மற்ற அனைவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். ஆர்த்தி எல்கேஜி படித்து வந்தாள். இவர்களது வீட்டின் அருகே 40 அடி ஆழ கிணறு உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் கிணற்றில் சுமார் 30 அடிக்கு தண்ணீர் நிரம்பியிருந்தது. சிறுமிகள் 3 பேரும் இன்று காலை பள்ளிக்கு புறப்பட்டனர். டிபன் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த ஆர்த்தி, தரை கிணற்றின் அருகே கை கழுவினாள். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தாள். கிணற்றில் ஏதோ விழுந்ததுபோல சத்தம் கேட்டதும் மகேஸ்வரி வெளியே வந்து பார்த்தார். மகளை காணாமல் திடுக்கிட்ட அவர், கிணற்றுக்குள் அவள் தவறி விழுந்ததை அறிந்து கதறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் திரண்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்குன்றம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினர். சிறுமி ஆர்த்தியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். வழியிலேயே அவள் பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் உடலை பார்த்து தாய், உறவினர்கள் கதறி அழுதது, அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்