காங்கிரஸ் நிர்பந்தத்திற்கு பணிந்தது தி.மு.க. 63 தொகுதிகளை ஒதுக்க சம்மதம்

புதன்கிழமை, 9 மார்ச் 2011      இந்தியா
Sonia-karunanithi 8

 

புதுடெல்லி, மார்ச் - 9  - மூன்று நாட்கள் இழுபறியாக நீடித்த காங்கிரஸ், தி.மு.க. தொகுதி பங்கீடு விவகாரத்தில் நேற்று ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையும் கொடுக்க தி.மு.க. மேலிடம் முடிவுசெய்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே இழுபறி நீடித்துவந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட்டணி முறிந்துவிட்டதாக தி.மு.க. தரப்பில்  அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பை கேட்டவுடனேயே இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்ற நிலையில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசுகளை வெடித்து கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனால் தி.மு.க.வினர் கடும் கோபமும் அதிர்ச்சியும்  அடைந்தனர்.  இதையடுத்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அக்கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க இருப்பதாகவும், ஆனால் பிரச்சனைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும் கூறியிருந்தது. என்றாலும் தி.மு.க.வைச் சேர்ந்த 6 மத்திய மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தி.மு.க. மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், காந்திசெல்வன், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். ஏற்கனவே பழனிமாணிக்கம் டெல்லியில் இருக்கிறார் என்றும், அவரும் இவர்களுடன் சேர்ந்து ராஜினாமா கடிதங்களை நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுப்பார்கள் என்றும் தி.மு.க. மேலிடம் அறிவித்து இருந்தது. ஆனால் குறிப்பிட்ட அந்த தேதியில் அந்த நேரத்தில் ராஜினாமா கடிதங்கள் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு திங்கள்கிழமை மாலையில் இவர்கள் ராஜினாமா கடிதங்களை கொடுப்பார்கள் என்று டெல்லியில் டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார். அதுவும் நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய நிதி அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பிரணாப்முகர்ஜி தொலைபேசியில் 2 முறை தொடர்புகொண்டு  சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தி.மு.க. தலைமை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ராஜினாமா செய்வது மேலும் ஒரு நாள் தள்ளிவைக்கப்படுவதாகவும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று முன்தினம் தி.மு.க. மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். ஆனால் அந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவிதமான சமரசமும் ஏற்படவில்லை. முறிந்துபோனதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மீண்டும் தொடருமா? என்ற கேள்விக்குறி பல்வேறு தரப்பினர் மத்தியில் நிலவிய நிலையில் நேற்று மாலை டெல்லியில் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி விரும்பும் 63 தொகுதிகளையும் தர தி.மு.க. மேலிடம் சம்மதித்துவிட்டதாகவும், அதனால் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் ஆசாத் கூறினார். இந்த கூட்டணியில் இரு கட்சிகளும் சேர்ந்து செயல்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் -தி.மு.க. உறவு நீடிக்குமா என்ற நிச்சயமற்ற தன்மை நிலவிவந்த நிலையில் குலாம் நபி ஆசாத்தின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 60 க்கு மேல் ஒரு தொகுதிகூட ஒதுக்க முடியாது என்று அடம்பிடித்த தி.மு.க. மேலிடம் கடைசியில் காங்கிரஸ் கேட்ட  63 தொகுதிகளையுமே அதற்கு வாரி வழங்கியுள்ளதன் மர்மம் என்ன என்பதுதான்  தெரியவில்லை. இது திரைமறைவு ரகசியங்கள் இந்த விவகாரத்தில்  இருக்கலாமோ என்ற சந்தேகத்தை பொதுமக்கள்  மத்தியில் எழுப்பியுள்ளது. தி.மு.க. காங்கிரஸ் இடையே மூன்று நாட்களுக்கு பிறகு தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணி என்ன என்பது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தன் குடும்பத்தினரை விசாரிக்கக் கூடாது. தன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடத்தை தி.மு.க. தலைவர்  நிர்பந்தம் செய்துவந்தார். அதே நிபந்தனையை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பேரங்களுக்கு பிறகே நேற்று மாலையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் அரசியல் நோக்கர்கள் மத்தியில் இது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. எது எப்படியோ, 3 நாட்கள் நீடித்த நாடகம் நேற்று ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டுவர தி.மு.க. தலைவர்கள் தலைநகரில் படாதபாடு பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே டெல்லியில் முகாமிட்டு சோனியா முதல் பிரணாப்வரை அவர்கள் சந்தித்து தங்கள் காரியத்தை முடித்துக்கொண்டனர். காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறி தங்களது 3 நாள் நாடகத்திற்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார்கள். என்னதான் உடன்பாடு ஏற்பட்டாலும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. இந்த கூட்டணி தேர்தல் கூட்டணியாக இருக்குமே தவிர, தொண்டர்கள் மத்தியில் உண்மையான கூட்டணியாக இந்த கூட்டணி  இருக்குமா என்பது சந்தேகமே...

இதை ஷேர் செய்திடுங்கள்: