முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட கலெக்டர் - போலீஸ் கமிஷனருக்கு விருது

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.15 - பொதுமக்கள் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு கண்ட மதுரை கலெக்டர் சகாயம், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், திருவாரூர் கலெக்டர் முனியநாதன், பெரம்பலூர் கலெக்டர் தாரஸ் அகமது மற்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், திருவாரூர் எஸ்.பி. அண்ணாதுரை ஆகியோரை பாராட்டி விருதுகள் மற்றும் கேடயங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.இது குறித்த விபரம் வருமாறு:-

மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு சென்னை கோட்டையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சிறப்பாக பணி புரிந்த கலெக்டர்கள் , காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா விருதும், கேடயமும் வழங்கினார்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அமைச்சர்கள், தலைமை செயலாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், அரசுத் துறை செயலாளர்கள், முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். 

முதல்வர் ஜெயலலிதாவின் தொடக்க உரையில் அரசின் திட்டங்கள், நோக்கங்கள் குறித்து பேசினார். மாவட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்ட பிரச்சினைகள் குறித்து விளக்கினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சட்டம்- ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினார்கள். 

 2 வது நாள் மாநாடு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது, சட்டம்- ஒழுங்கை முறைப்படி நிலைநாட்டுவது, அரசு திட்டங்களின் பயன்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து கருத்துக்கள் அறியப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 

முதலமைச்சர் சிறப்பு பிரிவுக்கு பொதுமக்கள் தெரிவித்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரனுக்கு விருது வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தாரஸ் அகமது, திருவாரூர் மாவட்ட கலெக்டர் முனியநாதன், மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் ஆகியோரும் விருது பெற்றனர். இதற்கான கேடயத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். 

மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய வேலூர் மாவட்ட முன்னாள் கலெக்டர் கோபாலகிருஷ்ணனுக்கு 10 கிராம் தங்க பதக்கமும், முன்னாள் கலெக்டர் மோகன்தாசுக்கு சான்றிதழும், காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் கலெக்டர் வெங்கடேசனுக்கு ரூ.25 காசோலையும் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட முன்னாள் கலெக்டர் வள்ளலாரும் சான்றிதழ் பெற்றார். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்த மகரபூசனத்திற்கு கேடயம் வழங்கப்பட்டது. 

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், உயர்போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இதில் போலீசாரின் பிரச்சினைகள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டன. இறுதியாக முதல்வர் ஜெயலலிதா நிறைவுரையாற்றி முடித்து வைத்தார். மாநாட்டின் இறுதியில் முதல் அமைச்சர் தனிப்பிரிவுக்கு வரும் ம னுக்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுத்ததற்காக மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், திருவாரூர் கண்காணிப்பாளர் அண்ணாதுரை ஆகியோருக்கு பாராட்டு கேடயத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்