முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி குண்டர் சட்டத்தில் கைது

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.15 - அரசு வேலை வாங்கி தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக போலியாக நடித்த நபரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பேரையூரைச் சேர்ந்த முனியாண்டி என்பவர், சென்னை திருவான்மியூர், பிள்ளையர் கோவில் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரிடம் தன்னுடைய மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னிடமிருந்து ரூ.4 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகவும், மேலும் அவர் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும் கூறிக்கொண்டு வேலை வாங்கி தருவதாகக் கூறி பல நபர்களிடம் இலட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்திருப்பதாக சென்னை காவல் ஆணையாளர் திருபாதியிடம் புகார் அளித்தார்.

அவர் கொடுத்த புகார் சம்பந்தமாக ஆணையாளர் திரிபாதி ஆணைப்படி காவல் கூடுதல் ஆணையாளர் (குற்றம்) அபய்குமார் சிங், உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் ராதிகா கூடுதல் துணை ஆணையாளர் மகேஷ்வரன் மற்றும் உதவி ஆணையாளர் ரவீந்திரன் மேற்பார்வையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

ஆய்வாளர் ஜீவானந்தம் கடந்த செப்.22 அன்று விஜயகுமாரை கைது செய்து தைதாப்பேட்டை 11-வது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை மத்திய புழல் சிறையில் அடைத்தார். மேற்படி குற்றவாளி விஜயகுமாரின் மீது மத்திய குற்றப்பிரிவில் மேலும் இரண்டு வழக்குகளும் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுக்கா காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. 

புலன் விசாரணையில் மேற்படி போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியான விஜயகுமார் என்பவர் தமிழ்நாடு முழுவதிலும் சுமார் 100-க்கு மேற்பட்ட படித்த வேலையில்லாத பட்டதாரிகளை தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று நம்ப வைத்து சுழல் விளக்கு பொருத்திய காரில் வலம் வந்து மத்திய அரசு முத்திரையை பயன்படுத்தி மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக போலி பணி நியமன ஆணைகளை வழங்கி சுமார் 2 கோடிக்கு மேல் ஏமாற்றி மோசடி செய்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலி ஐ.ஏ.எஸ். அதிகாரியான விஜயகுமார் என்பவரை சென்னை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்