முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.16 - கடந்த 3 ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.80 அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதற்கு நாடுமுழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலையை குறைப்பதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்தன. இந்த விலை குறைப்பு நேற்று இரவு முதலே அமுலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலவரத்திற்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதன்படி கடந்த 3 ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. 

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை சுமார் ரூ.10 அதிகரித்துவிட்டது. கடந்த ஜனவரி மாதம் 63 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ஒரு லிட்டர் 73 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் பெட்ரோலைப் போலவே பெட்ரோலிய பொருட்களான டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணை விலைகளும் உயர்த்தப்படலாம் என்று எண்ணை நிறுவனங்கள் தெரிவித்து வந்ததால் பொதுமக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டது. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் மம்தா பேனர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேலும் இதுபோன்று ஒரு விலை உயர்வை அறிவித்தால் கூட்டணியில் இருந்து விலகிவிடுவோம் என்றும் அறிவித்தது. இப்படி பல்வேறு தரப்பிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை கணிசமான அளவில் குறைந்துள்ளதாலும் பெட்ரோல் விலையை குறைக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்தன. மேலும் சுத்திகரிப்பு வரி உள்பட ஏனைய செலவினங்களும் குறைந்ததால் இந்த முடிவை எண்ணை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. 

முதலில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1 குறைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது லிட்டருக்கு ரூ. 2 வரை குறைக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து எண்ணை நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் கடந்த 3 ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தப்பட்டபோது கச்சா எண்ணை விலை பேரலுக்கு 121 டாலராக இருந்தது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணை விலை ரூ. 115 ஆக உள்ளது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சராசரியாக 49.20 ஆக உள்ளது. இது கடந்த அக்டோபர் மாதம் இருந்ததை விட குறைவாகும். இத்தகைய காரணங்களால் பெட்ரோல் விலையை குறைக்க முடிந்தது என்று தெரிவித்தார். 

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு பெட்ரோல் விலை குறைய இருப்பது இதுவே முதல்முறையாகும். பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வருகிற 22 ம் தேதி துவங்கவுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனையை எழுப்ப தயாராக இருந்தன. இந்நிலையில்தான் பெட்ரோல் விலையை எண்ணை நிறுவனங்கள் குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

நாளை (இன்று) முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2  குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிரடியாக நேற்று நள்ளிரவு முதலே இந்த விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்