முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றி

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

பாலசோர், நவ.16 - அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 3,000 கி.மீ.தூரம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி - 4 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகில் பல்வேறு நாடுகளும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் வெற்றி கண்டு வரும் நிலையில் இந்தியாவும் ஏவுகணை உற்பத்தியில் பீடு நடை போட்டு வருகிறது. என்றாலும் சீனா போன்ற நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு இந்தியா தனது ஏவுகணை தொழில் நுட்பத்தை அவ்வப்போது அபிவிருத்தி செய்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு ரக அக்னி ஏவுகணைகளை தயாரித்து வெற்றி கண்டுள்ள இந்திய விஞ்ஞானிகள் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அதி நவீன அக்னி - 4 என்ற ஏவுகணையை தயாரித்துள்ளனர். இந்த அக்னி - 4 ஏவுகணை சோதனை நேற்று ஒரிஸ்ஸா மாநிலம் பாலசோர் அருகில் வங்கக்கடலில் வீலர்ஸ் தீவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த ஏவுகணை 3000 கி.மீ.தூரம் பறந்து சென்று  எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது.

அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் இந்த ஏவுகணை தரையிலிருந்து தரைக்கே பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. இதன் எடை 17 டன்.  இதன் நீளம் 20 மீட்டர்.

இந்த அக்னி 4 ஏவுகணை ஒரு மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை கொண்டது. எனவே இந்த ஏவுகணை இனி அக்னி 4 என்று அழைக்கப்படும் என்று இந்திய விஞ்ஞானிகள் கூறினர். நேற்று இந்த ஏவுகணை சர்வதேச கடல் பகுதியில் தயாராக  வைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக தாக்கி வெற்றி வாகை சூடியது.

சீனாவின் ஏவுகணை தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்த ஏவுகணை அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளதாக டெல்லியில் உள்ள பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்திய விஞ்ஞானிகளின் இந்த இமாலய வெற்றிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர். இதே போல 5,000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி ஏவுகணையும் விரைவில் சோதிக்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.

இந்த ஏவுகணைகள் அனைத்துமே உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்று பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

சோதனை செய்யப்பட்டு வெற்றி கண்ட ஏவுகணைகள் விரைவில் ராணுவத்தில் இணைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. அக்னி 1 ஏவுகணை 800 கி.மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய திறனையும், அக்னி- 2  2500கி.மீட்டர் தொலைவு சென்று தாக்கக்கூடிய திறனையும் பெற்றிருந்தன. தற்போது வெற்றிகரமாக ஏவப்பட்ட அக்னி 4 ஏவுகணை 3000 கி.மீட்டருக்கு அப்பாலும் சென்று தாக்கக்கூடிய வல்லமை படைத்தது. இந்த ஏவுகணையின் மூலம் சீனாவில் உள்ள முக்கிய நகரங்களான பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய விஞ்ஞானிகள் அடுத்ததாக அக்னி 5 என்ற ஏவுகணையை தயாரிக்க உள்ளனர். அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய இத்தகைய ஏவுகணைகள் 6000 கி.மீட்டர் தொலைவிற்கும் சென்று தாக்கும் வல்லமை பெற்றவை. இவை கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடியவையாக இருக்கும் என்றும் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.   

தற்போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட அக்னி 4 ஏவுகணையைப் போன்ற அதி நவீன ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இதுவரை இருந்துவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்