முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவிலில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

நாகர்கோவில்,நவ.16​​- தமிழ்நாடு முழுவதும் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க. இளைஞரணி சார்பில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் மகேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், மாவட்ட தி.மு.க. செயலாளருமான சுரேஷ் ராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ., புஷ்பலீலா ஆல்பன், அவைத்தலைவர் ஜோசப்ராஜ், ஜி.எம்.ஷா, ஹெலன் டேவிட்சன் எம்.பி., ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, நெடுஞ்செழியன், ராஜரெத்தினம், சற்குரு கண்ணன், சிற்றாறு ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெர்னார்டு, ரெஜினால்டு, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஷேக் தாவூது, நகர செயலாளர்கள் பொன். ஆசைதம்பி, இளைஞரணி துணை செயலாளர் ராஜேஷ் குமார், சபீக், பேரூராட்சி தலைவர்கள் சாய்ராம், லிவிங்ஸ்டன், நகரசபை முன்னாள் தலைவர்கள் ஜேசையா, ரேவன்கில், நாகர்கோவில் நகர சபை துணை தலைவர் சைமன்ராஜ், பார்த்தசாரதி, பால்ராஜ், வக்கீல்கள் மதியழகன், லீனஸ்ராஜ், சிங்காரராஜன், கனி, கவுன்சிலர்கள் ராஜாசிங், சீதா முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., ரெஜினால்டு அங்கு வந்தார். அவரை கண்டதும் மாவட்ட துணை செயலாளர் ஜோசப் ராஜ் உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி வேலைகள் பார்த்தவனெல்லாம் கட்சி கரை வேட்டி கட்டிட்டு வந்துட்டானுங்க என்று கூற ரெஜினால்டு ஆதரவாளர்கள் ஜோசப்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜோசப்ராஜ் ரெஜினால்டு ஆதரவாளரின் சட்டையை பிடித்து தாக்கினார். அதனை பார்த்து கொண்டிருந்த மனோ தங்கராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரெஜினால்டுக்கு ஆதரவாக ஜோசப்ராஜை தாக்கினர். இதை பார்த்து கொண்டிருந்த வக்கீல் மகேஷ் ஆதரவாளர் ராம்பால் மற்றும் கபிலன், பாலா, சீதாமுருகன் ஆகியோர் உடனடியாக பிரச்சனை நடந்த இடத்திற்கு வந்து இருதரப்பினரையும் விலக்கி விட்டனர். இந்த பிரச்சனையின் காரணமாக ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்தது. இது குறித்து பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ரெஜினால்டு நிரூபர்களிடம் கூறியதாவது:-

நான் தக்கலை ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறேன். விரைவில் உட்கட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் நான் மீண்டும் ஒன்றிய செயலாளர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக கட்சியில் உள்ள சிலர் எனக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார்கள். இதன் காரணமாக ஆர்ப்பாட்டத்திற்கு வந்த என்னை தாக்கி பேசி தகராறு செய்தனர். இது கட்சி தேர்தல் தொடர்பான பகையே தவிர உட்கட்சி பூசல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்