முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோஷி - வினோத்ராய் சந்திப்பு: திக்விஜயசிங் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, நவ.16 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்று அறிக்கை வெளியிடும் முன் வினோத்ராய், பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பே அவர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தது ஏன்? இருவரும் என்ன பேசினார்கள். இழப்பை அதிகரித்து காட்ட அந்த சந்திப்பில் முடிவெடுத்தார்களா என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜயசிங் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் இணையதளத்தில் எழுதியிருப்பதாவது, 

ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தை ஆராய்ந்து ரிப்போர் தயாரித்த ஆர்.பி. சிங்கிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியுள்ள விவரமும் வெளியே வந்து விட்டது. அந்த ரிப்போர்ட்டை திருத்தி மாற்றி எழுதி விட்டு அவரை படித்து பார்க்க கூட விடாமல் கடைசி பக்கத்தில் மட்டும் அவசர அவசரமாக கையெழுத்து வாங்கியது ஏன்? இதற்கு வினோத் ராய் விளக்கமளிக்க வேண்டும் என்றும் திக்விஜயசிங் அதில் கேள்வி எழுப்பி உள்ளார். 

இதற்கிடையே உயர்த்தி எழுதப்பட்ட ரிப்போர்ட்டில் கையெழுத்து போட்டு அனுப்புமாறு ஆர்.பி. சிங்கை வலியுறுத்தி மத்திய துணை தலைமை தணிக்கை அதிகாரி ரேகா குப்தா எழுதிய கடிதமும் வெளியே வந்துள்ளது. ரிப்போர்ட்டை முழுமையாக படித்து பார்க்கவும். இது தொடர்பாக தொலைத் தொடர்பு துறையினரிடம் விளக்கம் பெறவும் கூட எனக்கு போதிய அவகாசம் தரவில்லை என்று கேட்டு ஆர்.பி. சிங் பதிலுக்கு ரேகா குப்தாவுக்கு எழுதிய கடிதமும் வெளியே வந்துள்ளது. இதனால் சிங்கிற்கு போதிய அவகாசம் தராமல் ரூ. 1.76 லட்சம் கோடி என்று எழுதப்பட்ட ரிப்போர்ட்டில் ஏன் வினோத் ராயும், ரேகா குப்தாவும் அவசர அவசரமாக கையெழுத்து வாங்கினார்கள் என்ற கேள்வி எழுகிறது. முன்னதாக, தனக்கு ஏன் அவகாசம் தரவில்லை என்று கேள்வி எழுப்பிய ஆர்.பி. சிங்கின் நேர்மையை சந்தேகிக்கும் வகையில் ரேகா குப்தா சில கேள்விளை கேட்டதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ரேகா குப்தாவுக்கு ஆர்.பி. சிங் கடிதம் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த கடிதமும் வெளியே கசிந்துள்ளது. இந்த விவரங்களை வைத்து பார்க்கும் போது ஆர்.பி. சிங்கை கட்டாயப்படுத்தி ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்று எழுதப்பட்ட ரிப்போர்ட்டில் கையெழுத்து வாங்கியுள்ளனர் ரேகா குப்தாவும், வினோத்ராயும் என்று தெரிய வருகிறது. இதைத் தான் அவர் நாடாளுமன்ற கூட்டு குழுவிடமும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்