முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக காங்கிரஸ் தலைவராக ஞானதேசிகன் பதவியேற்பு

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.17 - தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக ஞானதேசிகன் பதவியேற்று கொண்டார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பிரபு,  ஜெயந்திநடராஜன் ஆகியோர் விழாவை புறக்கணித்தனர். தமிழக காங்கிரஸ் தலைவராக தங்கபாலு இருந்தார். தங்கபாலு தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஜால்ராவாக இருந்தார். தங்கபாலு தலைவராக இருந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் தலைதூக்கியது. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதற்கு தமிழகத்தில் கட்சி மேலிடத்திற்கு தவறாக வழிகாட்டியதும் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகளை தங்கபாலு செய்ததுதான் காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து தங்கபாலுவை பதவி விலக சொல்லி எதிர்ப்புகள் வலுத்தது.
இதையடுத்து தங்கபாலு படுதோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு புதிய தலைவரை காங்கிரஸ் மேலிடம் நியமிக்க காலந்தாழ்த்தியது. இடையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை நியமிக்க மேலிடம் முடிவெடுத்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தில் கணிசமான எம்.பிக்களை பெற வேண்டும் என்பதால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நியமிக்கவில்லை.
அதன் பிறகு கடந்தவாரம் குலாம்நபி ஆசாத் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அருகில் தங்கபாலுவை வைத்து கொண்டு தங்கபாலுதான் தலைவராக நீடிப்பார் என்றார். ஆனால் அன்று மாலையே டெல்லி மேலிடம் தங்கபாலுவை தூக்கிவிட்டு புதிய தலைவராக ஞானதேசிகனை நியமித்தது.
தலைவராக நியமிக்கப்பட்ட ஞானதேசிகன் நேற்று முறைப்படி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
நேற்று காலை மறைந்த தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மதியம் 2.00 மணியளவில் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த ஞானதேசிகன் அங்கு முறைப்படி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுகொண்டார். அப்போது உடன் பழைய தலைவர் தங்கபாலு, ஜி.கே.வாசன், தமிழக பொறுப்பாளர் காதர் ராய்காட், குமரிஆனந்தன், கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், ஜெ.எம்.ஹாருன், யுவராஜ், ராயபுரம் மனோ மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரங்கராஜன், ஜான்ஜேக்கப், பிரின்ஸ், விஜயதரணி ஆகியோர் உடனிருந்தனர். அனைவரும்  ஞானதேசிகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உடனிருந்தார்.  ஆனால் பதவியேற்பு விழாவிற்கு வரவில்லை.இந்த நிகழ்ச்சியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பிரபு, ஜெயந்திநடராஜன் ஆகியோர் புறக்கணித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்