முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1,650 கோடியில் மின்னொளி நகரமாகிறது மைசூர்

வியாழக்கிழமை, 17 நவம்பர் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

மைசூர், நவ.17 - அரண்மனை நகரமான மைசூர் இனி சூரிய மின்னொளி நகரமாக மாறப் போகிறது. ரூ. 1,650 கோடி முதலீட்டில் அதற்கான ஏற்பாடுகளை மைய அரசோடு இணைந்து மைசூர் மாநகராட்சி மேற்கொள்ளவுள்ளது. இதன் மூலம் மைசூர் நகரம் முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தால் மின்னப் போகிறது. மிகப் பிரம்மாண்டமான அரண்மனையும், கோவில்களும் நிறைந்த நகரம் மைசூர். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழா மிகப் பிரசித்தமானது. இந்த நகரத்தின் மின் தேவையை கருத்தில் கொண்டு மைசூர் மாநகராட்சியும், மைய அரசின் மரபு சாரா எரிசக்தி துறையும் இணைந்து சூரிய சக்தி மின் திட்டத்தை அமல்படுத்தவுள்ளது.
ரூ. 1,650 கோடி முதலீட்டில் இந்த திட்டம் துவங்கப்படவுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் இந்த திட்டத்தின் மூலம் மைசூர் நகரமே சூரிய மின் விளக்குகளால் ஒளிரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மரபு சாரா எரிசக்தி துறையின் இயக்குனர் திரிபாதி, மத்திய அரசு சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை நாடு முழுவதும் 31 நகரங்களில் அமல்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். அதற்கான பணிகள் துவங்கி விட்டதாக கூறிய அவர்,
எரிசக்தி தேவை அதிகரித்து வருவதாகவும், எனவே எரிபொருளை சிக்கனப்படுத்த பொதுமக்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மைசூரில் ஏற்கனவே சாமுண்டி மலை, மைசூர் அரண்மனை, பல்கலைக் கழக வளாகம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து கிடைக்கும் கழிவுகள் மூலம் 10 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சூரிய ஒளி மின் உற்பத்தி தொடங்கப்பட்டால் மைசூர் நகரம் தன்னிறைவு பெறும். இன்னும் 5 ஆண்டுகளில் சோலார் நகரம் என்று மைசூர் அழைக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்