முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி பட்டாக்களை வழங்கிய ஸ்டாலின் - பெரியகருப்பன்

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.19 - கடந்த தி.மு.க ஆட்சியில் 3 ஆயிரம் போலி பட்டாக்களை மு.க.ஸ்டாலின், கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் வழங்கியதாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் புகார் கூறியுள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் புரவலர் ஆர்.போஸ், மாநிலத்தலைவர் ரவிரங்கராஜன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

1989-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் பதவியினை ஒழிக்க லெட்சுமிகாந்தன் பாரதி ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு நியமனம் செய்து அறிக்கையும் பெற்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நேரத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்று நல்லாட்சி நடத்திவருவதற்கு எங்களது தமிழ்நாடு அரசு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசின்  விலையில்லா நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவார்கள்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கிராம நிர்வாக அலுவலர்களை நினைவில் வைத்து சலுகைகள் அறிவிப்பது வழக்கம். அதன் ஒரு கட்டமாக அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் தரமான மடிக்கணினி நகல் எடுக்கும் கருவியுடன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் அறிவித்துள்ளார்கள். இதற்கெல்லாம் சேர்த்து எங்கள் சங்கத்தின் சார்பாக திருச்சி அல்லது புதுக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கும் தேதியில் நன்றியறிவிப்பு மாநாடு நடத்த முடிவு செய்து தீர்மானம் அனுப்பியிருக்கின்றோம். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மூத்த அமைச்சர்கள் தலைமையில் வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கிட முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 16.02.2011 முதல் 28.02.2011 வரை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வேலை நிறுத்த காலத்தை ஒழுங்குப்படுத்துவதாகக் கூறி போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. முக்கிய கோரிக்கையான தர ஊதியம் உயர்த்தியும் உத்தரவிடப்பட்டது. ஆனால் 13 நாள் ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே முதல்வர் ஜெயலலிதாவிடம் வேலை நிறுத்தக் காலத்தை ஒழுங்குப்படுத்தி ஊதியப்பயன் கிடைக்க உத்தரவிடக் கோரியுள்ளோம்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரம், கழனிவாசல் கிராமங்களில் 3000 மூவாயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாவினை முன்னாள் துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின், சிவகங்கை மாவட்ட அன்றைய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலமையில் வழங்கினார்கள். அதன்பின் மூவாயிரம் பட்டாக்களும் ரத்து செய்யப்பட்டன. 20 கோடிக்கு மேல் அரசுக்கு பணம் செலுத்தி பட்டாக்கள் பெற்று பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். போலிப்பட்டா வழங்கிய விவகாரத்தில் விசாரணை நடத்தக்கோரியும், தவறு செய்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தகுதியுள்ளவர்களுக்கு பட்டாக்கள் வழங்கக் கோரியும், போலிப்பட்டா கொடுக்க ஒத்துழைக்காத இரண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையினை, ரத்துச் செய்யக்கோரியும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு கொண்டு வரும் வண்ணம் 16.12.2011 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழக அரசால் மக்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி வழங்குவதற்காக வட்டாட்சியர் அலுவலகங்களிலிருந்து கிராமங்களுக்கு எடுத்து செல்வதற்கு ஏற்றுக்கூலி, இறக்கும்கூலி மற்றும் உள்செலவினங்களுக்காக 31 மாவட்டங்களுக்கான 37 1/2 கோடி ரூபாய் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு போலி வவுச்சர்கள் தயார் செய்து இந்த தொகை முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்களால் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடியினை கண்டுபிடித்து விசாரணை நடத்திட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு அமைக்கும் பொருட்டு முதல்வர் ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டுவர வருகின்ற 30.11.2011 புதன்கிழமை மாலை 6 மணிக்கு புதுக்கோட்டையில் திறந்த வெளிப் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்