முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றம் 22-ம் தேதி கூடுகிறது

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.19 - பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வருகிற 22 ம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்பி அரசியல் புயலை ஏற்படுத்த பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரின்போது 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்சனையை கிளப்பின. காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் போன்றவற்றையும் எதிர்க்கட்சிகள் எழுப்பின. இந்த மழைக்கால கூட்டத் தொடரின்போது அடிக்கடி சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த கூட்டத் தொடர் முடிந்து வருகிற 22 ம் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்த கூட்டத் தொடர் வருகிற டிசம்பர் மாதம் 23 ம் தேதிவரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் ஏற்கனவே கிளப்பப்பட்ட 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப்பணம், விலைவாசி உயர்வு, வலுவான லோக்பால் மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தனித்தெலுங்கானா மாநிலம்  உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி அரசியல் புயலை உருவாக்க பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த பிரச்சனையானாலும் அதை சமாளிக்க மத்திய அரசு வலுவாக உள்ளது என்று மத்தியில் உள்ள மூத்த அமைச்சர்கள் உறுதிபட கூறுகின்றனர். என்றாலும்கூட பாராளுமன்ற நடவடிக்கைகளை சமூகமாக நடத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜேட்லி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மத்திய நிதியமைச்சரும், பாராளுமன்ற அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி சந்தித்து பாராளுமன்றத்தை சமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றைக் கூட்டி பாராளுமன்ற நடவடிக்கைகளை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.  

இந்த நிலையில் மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவது, தனித் தெலுங்கானா கோரி நடந்து வரும் போராட்டம் ஆகியவை குறித்து நடக்கவிருக்கும் பாராளுமன்ற  குளிர்கால கூட்டத் தொடரில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.  மேலும் ஊழல், மணிப்பூர் நிலவரம், வெள்ளம், வேகமாக பரவி வரும் மூளைக் காய்ச்சல், இந்தியா - பாகிஸ்தான் உறவு, காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும் தங்கள் கட்சியின் எம்.பிக்கள் நோட்டீஸ் அனுப்புவார்கள். காஷ்மீரின் ஆயுத படை சிறப்பு அதிகார சட்டத்தை விலக்கிக் கொள்வது தொடர்பான அந்த மாநில அரசின் கோரிக்கை, 2 ஜி. ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றியும் முக்கியமாக விரிவாக விவாதிக்கப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீரில் ப்ளூரைடு இருப்பது குறித்து தங்களது கட்சி  கவன ஈர்ப்பு மசோதாவை கொண்டு வரும் என்று லோக்சபை எதிர்க்கட்சி தலைவரும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான  சுஷ்மாசுவராஜ் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் முக்கியமாக விலைவாசி உயர்வு பிரச்சினையை வைத்து காங்கிரஸ் அரசை மடக்க இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்