முக்கிய செய்திகள்

திருப்பதி கோவிலில் நாணயங்களை எண்ணும் கருவி

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

நகரி, நவ.19 - திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரும் காணிக்கை நாணயங்களை எண்ணுவதற்கு புதிதாக நாணயங்களை எண்ணும் கருவி அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரும் காணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.675 கோடி வருமானம் கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டில் அது 780 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காணிக்கை நாணயங்களை பிரித்து எண்ணுவதற்கு 40 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மட்டும் மாதம் ஒன்றிற்கு ரூ. 10 லட்சம் சம்பளமாக வழங்க வேண்டியதுள்ளது. இதனால் ஊழியர்களை குறைக்கும் நோக்கில் நாணயங்களை தனித்தனியாக பிரிப்பதற்கு புதிய கருவி ஒன்றை அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு நாணயங்களை எண்ணிவிடலாம். இதுகுறித்து தேவஸ்தான நிதி ஆலோசகர் பாஸ்கரரெட்டி கூறுகையில், தினமும் உண்டியலில் ரூ.10 லட்சத்திற்கு நாணயங்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர். அவற்றை தனித்தனியாக பிரிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. அவற்றை பிரிப்பதற்குத்தான் அதிக ஊழியர்களை நியமித்துள்ளோம். பக்தர்கள் உண்டியலில் நாணயங்களைப் போடும்போதே ரூ. 1, ரூ.2, ரூ.5 , ரூ.10 என தனித்தனியாக பிரிக்கும் கருவியை அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்த கருவியை அமைப்பது குறித்து என்ஜினீயர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த கருவியை அமைத்த பிறகு பாதி ஊழியர்கள் குறைக்கப்படுவார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: