முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் பேச்சு வார்த்தை தோல்வியால் அதிருப்தி

சனிக்கிழமை, 19 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கூடங்குளம், நவ.19 - கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக மத்திய, மாநில குழுக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தையில் திருப்தி ஏற்படவில்லை என்று மாநில குழுவில் உள்ள போராட்டக்காரர்கள் குழு பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை மூடக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அணுமின் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பொதுமக்களின் அச்சத்தை போக்க நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக் கழக துணைவேந்தர் முத்துநாயகம் தலைமையில் அணுசக்தி, சுற்றுச்சூழல், கதிரியக்க நிபுணர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை கலெக்டர் செல்வராஜ், எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, போராட்டக் குழு சார்பில் புஷ்பராயன், ஜேசுராஜ், யாககோபுரம் தங்கராஜ் ஆகியோர் கொண்ட குழுவை மாநில அரசும் அமைத்தது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று முன்தினம் மத்திய குழுவினர் 3 வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் இந்திய அணுசக்தி அதிகாரிகளிடம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். 

கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள கதிரியக்க பாதுகாப்பு அம்சங்கள், சுற்றுச்சூழல் அறிக்கைகள், அணு உலைகளின் செயல்பாட்டு திறன், அணுமின் நிலையத்துக்கு தேவையான தண்ணீர் இருப்புகள், அணு உலையில் இருந்து வெளியாகும் வெப்பம் கலந்த நீரால் கடலில் ஏற்படும் சீதோஷன நிலை மாற்றங்கள், இந்திய நில அமைப்புப் படி அணு உலை கட்டப்பட்டிருக்கும் இடத்தின் தேர்வு, இயற்கை சீற்றங்களால் அணுமின் நிலையம் பாதிக்காதவாறு அதன் பாதுகாப்பு அம்சங்கள், அணு உலையின் தொழில்நுட்ப வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஆவணங்களை கேட்டறிந்து அதன்படி கூடங்குளம் அணு உலை கட்டப்பட்டுள்ளதா என அவர்கள் ஆய்வு செய்தனர். 

கூடங்குளத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்திய அணுசக்தி கழக தலைமையிடமான மும்பையில் இருந்து வந்த செயல் இயக்குனர் குந்தீப் தலைமையிலான அதிகாரிகள் செயல் விளக்கப் படங்களுடன் மத்திய குழுவிற்கு விளக்கினர். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினர் கொடுத்த 50 கேள்விகளுக்கு பதில்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மத்திய, மாநில குழுக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லை என்று மாநிலக் குழுவில் உள்ள போராட்டக் குழு பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். மத்திய குழு கூடங்குளம் மக்களின் பிரச்சினைகளை ஆராய முன்வரவில்லை என்றும், இனி தமிழக அரசு சொன்னால் மட்டுமே மீண்டும் மத்திய குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்