முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசப்பு வார்த்தைகள் மயங்காமல் மக்கள் ஒத்துழைப்பு ஆதரவு தரவேண்டும்-ஜெயலலிதா

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.- 21 - கருணாநிதியின் சாத்தான் வேதம் ஓதுவதுபோல் அரசியல் ஆதாயத்திற்காக அறிக்கை விடுபவர்களை நம்பாமல் மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு திவாலாகும் சூழ்நிலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களை உயர்ப்பிப்பதற்கும், இந்த நிறுவனங்கள் மக்களுக்கு தொடர்ந்து தங்களது சேவையை ஆற்றிடுவதற்கான  வழிவகை குறித்தும் 17.11.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, கட்டண உயர்வுகள் பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டன.  இதனையடுத்து, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதற்கான காரணங்களை அன்றே தொலைக்காட்சி மூலம் நான் எடுத்துரைத்ததோடு மட்டுமல்லாமல், அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவினை நல்கிட வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோளும் விடுத்திருந்தேன்.  இந்த கட்டண உயர்வுகளை கண்டித்து, பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அறிக்கைகள் விடுத்துள்ளனர்.  அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த கட்சிகளின் தலைவர்கள் கூட இந்தக் கட்டண உயர்வுகளுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு, அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் நலனை விடுத்து வேறு பல காரணங்களுக்காக பல்வேறு  முடிவுகளை முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு எடுத்த காரணத்தால் தான், எதிர்கட்சி என்ற அந்தஸ்தைக் கூட வழங்காமல், சட்டமன்ற தேர்தலில்  மக்கள் தி.மு.க.வை முற்றிலும் புறக்கணித்துவிட்டனர். இவ்வாறு புறக்கணிக்கப்பட்டதற்கு, பொதுத் துறை நிறுவனங்களை முந்தைய தி.மு.க. அரசு சீரழித்ததும் ஒரு காரணம். இது போன்ற கடினமான முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு எனது தலைமையிலான அரசை ஆளாக்கிவிட்டு, தாங்கள் தான் மக்களை பாதுகாப்பதைப் போல nullநீலிக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதியின் செயல் சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. 17.11.2011 அன்று தமிழக அரசின் இந்த முடிவுகளைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது, எவ்வளவு உயர்த்தியிருக்கிறார்கள், என்ன காரணத்திற்காக உயர்த்தியிருக்கிறார்கள் என்ற காரணங்களையெல்லாம் தெரிந்து கொண்டு தி.மு.க தனது கருத்தை அறிவிக்கும் என்பது தான் கருணாநிதியின் முதல் எதிர்த் தாக்குதலாக இருந்தது. அரசு பொது நிறுவனங்கள் எல்லாம் நஷ்டத்தில் இயங்கக் காரணம் கடந்த கால தி.மு.க ஆட்சி தான் என்று தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறாரே என்ற கேள்விக்கு, இதைப் பொதுமக்கள் தீர்ப்புக்கு விட்டுவிடுகிறேன் என்று பதில் அளித்துள்ளார் கருணாநிதி. இந்தப் பதிலிலிருந்து, பொதுத் துறை நிறுவனங்களை சீரழித்து, இந்தக் கட்டண உயர்வுக்கு வழி வகுத்தது முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு தான் என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டு இருக்கிறார் கருணாநிதி.

இதனையடுத்து, நேற்று வெளியிட்ட அறிக்கையில் பொதுத் துறை நிறுவனங்களுக்கு கடன் சுமை இருப்பது உண்மை தான் என்ற போதிலும், அந்தச் சுமையை ஏழை எளிய பொதுமக்கள் தலையிலே சுமத்தக் கூடாது என்பதற்காகத் தான் இந்தக் கட்டணங்களையெல்லாம் அதிகப்படுத்தவில்லை..... அதிகாரிகள் நிறுவனங்களுக்கு உள்ள கடன் சுமையைக் குறைக்க இந்தக் கட்டணங்களை எல்லாம் அதிகப்படுத்த வேண்டும் என்று என்னிடமும் கூறுவார்கள். அரசு கடன் பெற்றாவது மக்களுக்கு கெடுதல் வராமல் பாதுகாப்போம் என்று தான் கூறி இருக்கிறேன் என்றும், கட்டணங்களை உயர்த்தினால் சாதாரண ஏழை நடுத்தர மக்கள், மாதச் சம்பளத்தில் திட்டமிட்டு குடும்பம் நடத்துவோர் எப்படி இவ்வளவு செலவுகளை சமாளிக்க முடியும்? என்றும் நீnullலிக்கண்ணீர் வடித்திருக்கிறார் கருணாநிதி.

மின்சார வாரியம் என்றாலும், அரசு போக்குவரத்துக் கழகங்கள் என்றாலும், ஆவின் நிறுவனம் என்றாலும், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் மிகுந்த நஷ்டத்திற்கு  உள்ளாக்கி அவற்றை செயலிழக்கச் செய்த பெருமை முந்தைய  மைனாரிட்டி தி.மு.க அரசையும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியையுமே சாரும்.  அரசு அதிகாரிகள், கட்டணங்களை உயர்த்த இவரிடம் கேட்டுக் கொண்டது போலவும், ஆனால் மக்களுக்காக இவர் உயர்த்த வேண்டாம் என்று கூறி அரசு கடன் வாங்கி இந்த நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்று தான் கூறியதைப் போலவும் ஒரு புளுகு முட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.

அரசு கடன் பெற்று, அந்தக் கடனிலிருந்து தமிழ்நாடு மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கியிருந்தால், அந்த நிறுவனங்கள் எவ்வாறு இது போன்ற ஒரு மீள முடியாத கடன் சுமையில், கடன் சுழலில் சிக்கி இருக்கும்?  அரசு பெற்றக் கடனிலிருந்து தானே தங்களுக்கு மட்டும் பயன் உள்ள, மக்களுக்கு எந்தவிதப் பயனும் விளைவிக்காத இலவசத் திட்டங்களுக்கு செலவிடப்பட்டது?  பின்னர் அரசு எங்கிருந்து இந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்க இயலும்? பொதுத் துறை நிறுவனங்களை முற்றிலும் முடங்கச் செய்துவிட்டு, அவற்றை மரணப் படுக்கையில் தள்ளி விட்டு, இன்று வேறு வழியின்றி கட்டண உயர்வுகள் செயல்படுத்தப்படும்  போது மக்களுக்காக பரிந்து பேசுவது போல பாசாங்கு செய்வது குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது போல் உள்ளது.  

இது முதலைக் கண்ணீர் தான் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.  இது போன்ற அறிக்கைகளால், தமிழக மக்கள் ஒன்றும் ஏமாந்துவிட மாட்டார்கள்.  பொதுத் துறை நிறுவனங்களை முடக்கிய கருணாநிதிக்கு இது போன்ற ஒரு கண்டன அறிக்கையை வெளியிட எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை.  

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற   தேர்தலைச் சந்தித்து, தற்போது தமிழக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகளின் தலைவர்களில் பெரும்பாலானோர், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், என்னைச் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர். அப்போது, தமிழ்நாட்டின் மோசமான நிதிநிலை குறித்தும், மைனாரிட்டி தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடுகள் குறித்தும், பொது மக்கள் நலனை எண்ணிப் பாராத செயல்பாடுகள் குறித்தும் என்னிடம் கவலை தெரிவித்தனர். இவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்றும், நான் முதலமைச்சாராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னால் தான் இவற்றையெல்லாம் சரி செய்ய முடியும் என்றும், கடினமான முடிவுகளை, தைரியமாக, என்னால் தான் எடுக்க முடியும் என்றும் கூறினர். 

அப்போது அவ்வாறு கூறிவிட்டு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த  கட்டண உயர்வுகளுக்கு கண்டன அறிக்கைகளை விடுவது சரியான செயல் தானா? என்பதை அவர்கள் மனசாட்சியிடமே விட்டு விடுகிறேன். முன்பு, தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்தும், பொதுத் துறை நிறுவனங்களின் நிலை குறித்தும் கவலை தெரிவித்தவர்கள், தற்போது கண்டனம் தெரிவிப்பது இரட்டை வேடம் தானே! தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனத்தின் தற்போதைய  உண்மை நிலை என்ன என்று எதிர்கட்சித் தலைவர்கள் எல்லோருக்கும் தெரியும்.  

இன்றைய அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு கண்டனம் தெரிவிப்பது சரிதானா என்பதை அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். அரசியல் காரணங்களை விட, நாட்டின் நலன், நாட்டு மக்களின் நலன் முக்கியமானது என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  இதனைக் கருத்தில் கொண்டு உங்கள் கண்டனங்களை தெரிவிக்க முற்படுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

2006 ஆம் ஆண்டு வரை லாபம் ஈட்டி வந்த பால் கூட்டுறவுச் சங்கங்கள் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.  ஆவின் நிறுவனம்  கொள்முதல் செய்த பாலுக்கு 45 நாட்கள் கழித்தும் பணம் கொடுக்க முடியாத நிலை உள்ளது.  தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் 150 லட்சம் லிட்டர் பாலில் 22 லட்சம் லிட்டர் பால் கூட ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்ய இயலவில்லை.  அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான உரிய விலையை 45 நாட்களுக்கு மேலாகியும் பால் உற்பத்தியாளர்களுக்கு தராமல் நிலுவையில் வைத்திருந்தால், அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு எவ்வாறு பால் வழங்க இயலும்? பால் உற்பத்தியாளர்களுக்கு காலதாமதமாக பணம் வழங்கப்படுவதைப் பற்றி முந்தைய தி.மு.க அரசு எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை.

பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை குறைவாக, அதிலும் தாமதமாக அளிப்பது எந்தவிதத்தில் நியாயம்?  எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு நிதி உதவி அளித்துள்ளது.  இது தவிர,  வெளிச் சந்தையில் விற்கப்படும் பாலின் விலைக்கும் ஆவின் பாலின் விலைக்கும் மிகுந்த வேறுபாடு இருப்பதால், இடைத் தரகர்களுக்கும், கள்ளச் சந்தைதாரர்களுக்கும் இதில் பெரும் பயன் சென்றுவிடுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள இயலும்?  ஆவின் பால் விலையை உயர்த்தி உள்ளதன் மூலம் தான் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலையை, உரிய நேரத்தில் வழங்க இயலும்.

மேலும், ஆவின் நிறுவனம் திறம்பட மக்கள் சேவையாற்ற வழி வகுக்கும். இந்த விலையேற்றத்தை தற்போது மேற்கொள்ளவில்லை எனில் வெகு விரைவிலேயே ஆவின் நிறுவனத்தை மூட வேண்டிய நிலைதான் ஏற்படும்.  அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டால்,  அரசுத் துறையின் போட்டி ஏதும் இல்லாமல் தனியார் தங்கள் விருப்பப்படி பால் விலையை நிர்ணயிக்க வழி ஏற்பட்டுவிடும்.  அதனால் பொதுமக்களுக்கு, அதிலும், குறிப்பாக ஏழை எளிய, சாமான்ய, மாதச் சம்பளதாரர்கள் தான் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள்.  எனவே தான் ஆவின் நிறுவனம் முற்றிலும் முடங்கிப் போய் விடாமல் காப்பாற்றுவதற்காக இந்த அவசியமான விலை உயர்வினை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதே போன்று தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் முடங்கிப் போகும் நிலையில் உள்ளன. டீசலின் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே வருகிறது.  நான் ஏற்கெனவே எனது உரையில் குறிப்பிட்டதைப் போல 2001-ஆம் ஆண்டு 18 ரூபாய் 26 காசுகள் என்று இருந்த டீசல் விலையை தற்போது 43 ரூபாய் 95 காசுகள் என்ற அளவிற்கு மத்திய அரசு உயர்த்திவிட்டது.  மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையினால் டயர், டியூப் உட்பட பல்வேறு உதிரிப் பாகங்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துவிட்டன. தொழிலாளர்களின் ஊதியமும் உயர்ந்து விட்டது. கடந்த நிதியாண்டின் இறுதியில்  அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டு மொத்த இழப்பு 6,150 கோடி ரூபாய் என்ற அளவில் போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலையில் உள்ளன.  

இந்த நிலையில் எனது தலைமையிலான தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒவ்வொரு மாதமும்  60 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது.  போக்குவரத்துக் கழகங்களின் தற்போதைய நிலைமையை மாற்றுவதற்கு கட்டண உயர்வைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை.  இந்த நடவடிக்கை இப்போது எடுக்காமல் விட்டுவிட்டால், அரசு போக்குவரத்துக் கழகங்களே இல்லாத நிலைமைதான் ஏற்பட்டு விடும்.  அத்தகைய நிலைமை ஏற்பட்டால் தனியார் மட்டுமே பஸ்களை இயக்குவார்கள். 17.11.2011 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டண உயர்வுகளுக்கு ஒப்புதல் அளித்து எடுக்கப்பட்ட முடிவுகள், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் மோசமான செயல்பாடுகளால், வேறு வழி ஏதும் இல்லாமல், மன வருத்தத்துடன் எடுக்கப்பட்ட முடிவுகள் தான். 

அரசு பொதுத் துறை நிறுவனங்களின் சேவைகள் மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.  முந்தைய தி.மு.க அரசின் நடவடிக்கைகளால் முடங்கிப் போகும் அளவுக்கு தள்ளப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை காப்பாற்ற மத்திய அரசும் எந்தவித உதவியையும் வழங்காத நிலையில், அந்த நிறுவனங்கள் முற்றிலும் செயலற்றுப் போகாமல் காப்பாற்ற இந்த கட்டண உயர்வைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் இந்த முடிவுகளை அரசு எடுத்துள்ளது.  

இதனை பொதுமக்கள் நன்கு உணர்ந்து அரசியல் ஆதாயத்திற்காக அறிக்கை விடுபவர்களின் பசப்பு வார்த்தைகளில் மயங்காமல், அவர்கள் விரிக்கும் மாய வலையில் விழாமல், எனது தலைமையிலான அரசுக்கு தங்களது முழு ஒத்துழைப்பினையும், ஆதரவினையும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று தமிழக மக்களை மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியிருகிறார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்