முக்கிய செய்திகள்

லஞ்ச ஊழலுக்கு துணை போகும் பட்ஜெட் - பிருந்தா காரத்

Brinda

 

புதுடெல்லி, மார்ச் 11 - மத்திய  அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட் லஞ்ச ஊழலுக்கு துணைபோகும் பட்ஜெட் என்று இடது கம்யூனிஸ்டு எம்.பி. பிருந்தா காரத் மத்திய அரசை கடுமையாக சாடினார். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த 2011-12 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் மீதான விவாதத்தை ராஜ்ய சபையில் மீண்டும் துவக்கி வைத்து பேசிய இடது கம்யூனிஸ்டு எம்.பி. பிருந்தா காரத் இது கம்பெனிகளுக்கு ஆதரவான பட்ஜெட் என்று குற்றம் சாட்டினார்.

கம்பெனிகளுக்கான வரி 7.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு கம்பெனிகளுக்கு சாதகமான சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ. 40,000 கோடியை திரட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்பதற்கு பிருந்தா தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இதுபோன்ற 

பட்ஜெட்டின் நோக்கத்தையும் திசையையும் பார்க்கும் போது இதெல்லாம் ஊழலுக்கு மேலும் வழி வகுக்கும் என்பதையே காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

உலகின் பல்வேறு நாடுகளில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளில் இருந்து மத்திய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும்  விவசாயத்துறையிலும் சில்லறை வர்த்தக துறையிலும் நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிப்பதற்கு இந்த அரசு வளைந்து கொடுக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மத்திய  அரசின் பட்ஜெட் நடவடிக்கைகள் உள்ளார்ந்த வளர்ச்சிக்கு எதிரானவையாக இருக்கின்றன என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

பணக்காரர்களுக்கான நேரடி வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளுக்கான பாட புத்தகங்களில் கூட மறைமுக வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. நிதி அமைச்சர் தனது உரையில் வறுமை என்ற வார்த்தையை மருந்துக்கு கூட பயன்படுத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: