முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி வழக்கில் முதல் முறையாக 5 நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன்-சுப்ரீம் கோர்ட்

புதன்கிழமை, 23 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, நவ. - 24 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் முதல் முறையாக 5 நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை திகார் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்க சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டது. இவ்வாறு இவர்களுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதன் மூலம் டெல்லி திகார் சிறையில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோருக்கும் விரைவில் ஜாமீன் கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது. 5 நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால் தங்களுக்கும் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை கனிமொழிக்கும், ராசாவுக்கும் வந்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஹெச்.எல். தத்தூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 நிறுவன அதிகாரிகளையும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டனர். யுனிடெக் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குனர் வினோத்கோயங்கா, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஹரிநாயர், கவுதம் தோஷி, சுரேந்திர பிப்பாரா ஆகிய 5 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஒவ்வொருவரும் தலா ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 2 உத்தரவாதங்களை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை நீதிபதி தத்தூ வாசித்தார். முன்னதாக, மேற்கண்ட 5 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி விசாரணை நீதிமன்றத்திலும், டெல்லி ஐகோர்ட்டிலும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இரண்டு நீதிமன்றங்களும் இவர்களது ஜாமீன் மனுக்களை நிராகரித்து விட்ட நிலையில் மேற்கண்ட ஐவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். ஆனால் சி.பி.ஐ. இவர்களை ஜாமீனில் விடுவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களோ, தங்களுக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும். காரணம், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டன. எனவே சாட்சிகளை கலைக்க இனி சந்தர்ப்பமில்லை என்று அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் 5 நிறுவன அதிகாரிகளுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல் முறையாக இவர்களுக்குத்தான் ஜாமீன் கிடைத்துள்ளது. அதனால் தங்களுக்கும் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இதே வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி மற்றும் ராசாவுக்கும் வந்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. தன்னை ஜாமீனில் விடக் கோரி கனிமொழி தாக்கல் செய்திருந்த மனுக்கள் ஏற்கனவே 4 முறை நிராகரிக்கப்பட்டு விட்டன. தற்போது அவர் டெல்லி ஐகோர்ட்டில் மீண்டும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது ஜாமீன் மனுவை சி.பி.ஐ. கூட எதிர்க்கவில்லை. எனவே கடந்த முறையே அவருக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிபதியோ, ஒரு பெண் என்பதற்காக ஜாமீனில் விடுதலை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். இந்த நிலையில்தான் டெல்லி ஐகோர்ட்டில் டிசம்பர் 1 ம் தேதி கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரவிருக்கிறது. கனிமொழி மட்டுமின்றி மேலும் நால்வரின் ஜாமீன் மனுக்களும் டிசம்பர் 1 ம் தேதி டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே கனிமொழிக்காக வாதாடும் சில வழக்கறிஞர்களை மாற்றி விட்டு திறமையான வழக்கறிஞர்களை நியமிக்க தி.மு.க. மேலிடம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ, வரும் டிசம்பர் 1 ம் தேதி கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரிந்து விடும். அதே வேளையில் 5 நிறுவன அதிகாரிகளுக்கு முதல் முதலாக ஜாமீன் கிடைத்திருப்பதால் கனிமொழிக்கு இம்முறை ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முதன்முதலில் கைது செய்யப்பட்டவர் முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாதான். பிறகு அவரது அந்தரங்க உதவியாளர் ஆர்.கே. சந்தோலியா, முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் சித்தார்த்த பெகுரா ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக அந்த டி.வியின் பங்குதாரர்களில் முக்கியமானவராக கருதப்படும் கனிமொழி எம்.பி. மற்றும் அந்த டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். கடந்த மே மாதத்தில் இருந்து கனிமொழி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதாவது கிட்டத்தட்ட 7 மாதங்களாக கனிமொழி திகார் சிறையில் இருந்து வருகிறார். அவரை மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது குடும்பத்தார் மற்றும் கட்சி பிரமுகர்கள் இதுவரை பலமுறை சந்தித்து ஆறுதல் கூறி விட்டனர். அதே போல கனிமொழியும் தன் தந்தைக்கு தன்னை சந்தித்த போதெல்லாம் ஆறுதல் கூறி தேற்றினார். இந்த நிலையில்தான் வரும் டிசம்பர் 1 ம் தேதி அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஷாகித் உஸ்மான் பல்வா, அவரது உறவினர் ஆசிப் பல்வா மற்றும் ராஜீவ் அகர்வால், மும்பை திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்