முக்கிய செய்திகள்

கருணாநிதியை எதிர்த்து போட்டியிட தயார் - பிரபல திருநங்கை பேட்டி

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      தமிழகம்
rose at press club (1)

 

சென்னை, மார்ச் 11 - தே.மு.தி.க. சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாகவும், வாய்ப்பளித்தால் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட தயார் என்று `இப்படிக்கு' ரோஸ் திருநங்கை அறிவித்துள்ளார்.

இதுபற்றி நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த `இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சி புகழ் திருநங்கை ரோஸ் வெங்கடேசன் கூறியதாவது:-

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட திருநங்கைகளை அலைகழிக்க வைத்திருக்கிறது இந்த சமுதாயம். அதையும் மீறி தற்போது சில ஆண்டுகளாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. திருநங்கைகள் வெளிச் சமுதாயத்திற்கு வந்து தங்கள் போராட்டத்தை நடத்த ஆரம்பித்துள்ளனர். அதன் வெளிப்பாடாகத் தான் அரசியலில் ஈடுபட்டு ஒரு மாற்றத்தை உருவாக்க உள்ளோம். 

புள்ளி விவரப்படி 5 முதல் 10 சதவிகிதம் பாலின மற்றும் பாலியல் சிறுபான்மையினர் மற்றும் திருநங்கைகள் உலக மக்கள் தொகையில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 35 லட்சம் முதல் 70 லட்சம் பேர் வரை பாலின, பாலியல் சிறுபான்மையினர் மற்றும் திருநங்கைகள் உள்ளனர்.  எந்த கட்சிகளும் இதுவரை மதிக்கவில்லை. இதுவரை தமிழக அரசியல் கட்சிகளுக்கு தெரியாமல் இருந்தது. 2004-ம் ஆண்டு பொதுநல வழக்கு மூலம் கணக்கெடுப்பை உத்தரவாதப்படுத்திய பிறகு திருநங்கைகளை அரசியல் கட்சிகள் கவனிக்க ஆரம்பித்தது. அதன் பிறகு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. 

விஜயகாந்த் தே.மு.தி.க. ஆரம்பித்தது முதல் இன்று வரை திருநங்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். தே.மு.தி.க. தற்போது தமிழகத்தில் 3 வது பெரிய கட்சியாக உள்ளது. இப்போது அ.தி.மு.க.வுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. மக்கள் விரும்பும் கூட்டணியாக உள்ளது. அதனால் அவரது கட்சியில் இணைந்து பணியாற்ற விருப்பமாக உள்ளேன். 

முதலில் நான் இந்திய பிரஜை. தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்ததால் தமிழ் கலாச்சாரத்தையும், பிரச்சினைகளையும் அறிந்தவள். மூன்றாவதாக நான் ஒரு பெண் என்ற முறையில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நன்கறிவேன். நான்காவதாக நான் ஒரு திருநங்கையாக உணர்கிறேன். இந்த சமுதாயத்தில் சொந்த அனுபவத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்ததன் மூலம் முழுமையான சமூக நோக்கம் கொண்ட அரசியல்வாதியாக பார்க்க முடியும். நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. படித்து, பின்பு அமெரிக்காவில் எம்.எஸ். முடித்து ஊடகப் படிப்பில் லயோலா கல்லூரியில் தங்க மெடல் வாங்கியுள்ளேன்.  

தே.மு.தி.க. வில் கரூர் தொகுதிக்கு சீட்டு கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். விஜயகாந்த் குடும்பத்தில் நெருங்கிய தொடர்பு உள்ளதாலும் எனக்கு சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தி.மு.க. ஆட்சியில் 2006-ல் ஓட்டுரிமை வழங்கப்பட்டது. நலவாரியம் அமைக்கப்பட்டாலும் பேச்சளவில்தான் உள்ளது. செயல் முறையில் இல்லை. திருநங்கைகளுக்கு தி.மு.க. அரசு வீடு தருவதாக சொன்னார்கள். எவ்வளவு பேருக்கு வீடு கொடுத்தார்கள்? அறிவிப்புகள் மட்டும் போதுமா? விஜயகாந்த் ஆரம்பம் முதல் திருநங்கைகளுக்காக குரல் கொடுத்துள்ளார். 

முற்போக்கு பற்றி பேசும் கருணாநிதியின் கலைஞர் டி.வி.யில் முற்போக்கான சில விஷயங்களை என் நிகழ்ச்சி மூலம் கொண்டு வர முயற்சித்தபோது அவர்கள் பல சங்கடங்களை எனக்கு கொடுத்தார்கள். 

தே.மு.தி.க. சார்பில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் எதிர்த்து போட்டியிடுவேன். இவ்வாறு ரோஸ் வெங்கடேசன் கூறினார். தற்போது 2 திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: