முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி 5 பேருக்கு ஜாமீன்:கொண்டாடிய உறவினர்களை வெளியேற்றிய நீதிபதி

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, நவ. - 24 - ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் 5 நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவர்களது உறவினர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். கோர்ட் என்பதையும் மறந்து அவர்கள் அதை கொண்டாட தொடங்கி விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஐவரின் குடும்பத்தாரையும் மற்றும் பத்திரிக்கையாளர்களையும் சி.பி.ஐ. கோர்ட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார்.  முன்னதாக, சுப்ரீம் கோர்ட்டால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 5 நிறுவன அதிகாரிகளின் உறவினர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து அதை சி.பி.ஐ. கோர்ட்டில் கொண்டாடினர். இதனால் கோபமடைந்த நீதிபதி ஷைனி, முதலில் அவர்களது குடும்பத்தாரை எச்சரித்தார். கோர்ட்டில் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லி சொல்லிப் பார்த்தார். ஆனால் விடுதலையானவர்களின் உறவினர்களோ, நீதிமன்ற பணிகளையே பாதிக்கும் வகையில் அதை கொண்டாட தொடங்கி விட்டனர். இதனால் கோபமடைந்த நீதிபதி அவர்களையும், அங்கிருந்த பத்திரிக்கையாளர்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டார்.  இந்த வழக்கு விசாரணை இந்த இடத்தில் இன்றோடு முடிகிறது. ஆனால் கடைசி நாளில் பார்த்து நீங்கள் பிரச்சினைகளை உருவாக்குகிறீர்கள். தயவுசெய்து அனைவரும் வெளியேறுங்கள் என்றும் நீதிபதி ஷைனி கோபத்தோடு உத்தரவிட்டார். ஒரு கட்டத்தில் அவர் கோபத்தின் உச்சிக்கே சென்று, உங்கள் கொண்டாட்டம் போதும், பிறகு எல்லோரையும் வெளியேற்றி விடுவேன் என்றும் கடுமையாக எச்சரித்தாராம். உறவினர்களின் கொண்டாட்டத்தால் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நேற்று பெரும் பரபரப்பே ஏற்பட்டு போனது.  சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில்(பாட்டியாலா ஹவுஸ்) நேற்று 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போதுதான் 5 நிறுவன அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கிடைத்த விஷயம் அங்கிருந்தவர்களுக்கு தெரியவந்தது. இவ்வாறு தெரியவந்ததுமே அவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்களாம். இன்னும் சிலர் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து குதித்தார்களாம். இப்படி இவர்களது கொண்டாட்டம் கோர்ட்டுக்கு இடையூறாக இருக்கவே அதனால் ஆத்திரமடைந்த நீதிபதி அவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார்.  முன்னதாக, இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையானவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் கனிமொழி மற்றும் ராசாவும் கூட தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்களாம். இதே போல் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் ஜாமீனில் விடுதலையானவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்களாம். எது எப்படியோ, சி.பி.ஐ. கோர்ட்டே நேற்று பரபரப்புடனும், உற்சாகத்துடனும் காணப்பட்டது. நல்ல வேளை கோர்ட்டில் இவர்கள் பட்டாசு ஒன்றுதான் வெடிக்கவில்லை.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!