முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புராதன கட்டிடங்களை பாதுகாக்க வழக்கு

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.25 - சென்னையில் பூமிக்கடியில் செயல்படும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை அரசு துரிதமாக செயல்படுத்தி வருகிறது. அந்த பணியின் செயல்பாட்டால் சென்னையில் உள்ள புராதன கட்டிடங்கள் பாதிக்கப்படும் என்று கூறி ஹரிதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக இரு வழிகளில் விமான நிலையம் வரை பாதைகள் அமைக்ப்படும் என அறிவித்து, அதன் பணிகளும் தொடங்கி விட்டன. அதில் ஒரு வழி சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து பாரிமுனை, அண்ணாசாலை வழியாக பரங்கிமலை- விமான நிலையம் செல்கிறது. மற்றொருவழி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, வடபழனி - கிண்டி - பரங்கிமலை வழியாக விமான நிலையம் செல்கிறது. இதில் முதல் வழி பாதையில் புராதன கட்டிடங்களான தி மெயில், பி ஆர் அண்ட் சன்ஸ், பூம்புகார், ஹிக்கிம் பாதம் போன்ற கட்டிடங்கள் உள்ளன. மெட்ரோ ரயில் திட்டத்துக்காக நிலத்தடியில் வேலை பார்க்கும்போது இந்த புராதன கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும். 

இரண்டாவது வழி பாதையான சென்னை சென்ட்ரல் - பூந்தமல்லி நெடுஞ்சாலை முதல் பரங்கிமலை மற்றும் விமான நிலையம் வரை அமைக்கப்படும் பணிகள் நெடுகிலும் புராதன கட்டிடங்களான மெமோரி  ஹால், தெற்கு ரயில்வே அலுவலகம், ரிப்பன் கட்டிடம் போன்ற கட்டிடங்களுக்கு இந்த மெட்ரோ ரயில் நிலத்தடி பணிகளால் பாதிப்பு ஏற்படும். 

இவைகள் சாதாரண கட்டிடங்கள் அல்ல. இந்திய - பிரிட்டிஷ் இரு நாட்டு கலாச்சாரத்தை நீடித்து நிலைத்து காட்டக் கூடியவை. இந்த கலாச்சார சின்னங்களை நிச்சயம் பாதுகாத்தே ஆக வேண்டும். இதுபோன்ற புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் பிறப்பித்துள்ளது. இதனால் இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் இருந்து  விதிவிலக்காக இந்த புராதன கட்டிடங்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால் மற்றும் டி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த புராதன சின்னங்கள் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த கட்டிடங்களுக்கு சேதம் வராதபடி பணிகள் நடத்துவதற்கான மனுதாரர் கொடுத்த மனுவின்படி இது சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கு  இத்துடன் பைசல் செய்யப்படுகிறது என்றும்  உத்தரவு பிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony