முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.25 - பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என அரசின் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் புதியதாக நியமனம் பெற உள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தகுதி தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில், தேசிய ஆசிரியர் கல்வி கழகம் (என்சிடிஇ) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளபடி 1 முதல் 8ம் வகுப்புகளில் பாடம் நடத்த நியமிக்கப்படும் ஆசிரியர்கள் இந்த தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது. அதை அப்படியே தமிழக அரசும் எடுத்துக் கொண்டு, தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்துக்காக தகுதித் தேர்வு நடத்த உள்ளது. இதுகுறித்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலிங் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆசிரியர் பணிக்குரிய பட்டப் படிப்புகளை படித்து தகுதி பெற்றுள்ளவர்கள் இந்த தகுதித்தேர்வை எழுதலாம். தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் கொண்ட (கொள் குறிவகை) கேள்விகள் இடம் பெறும். சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும். தவறான விடைக்கு மதிப்பெண்கள் குறைக்கப்பட மாட்டாது.  தகுதித் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டதாக இருக்கும். இரண்டும் தலா 150 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். 1 முதல் 5ம் வகுப்புவரை பாடம் நடத்த தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு தாளும், 6 முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்த தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு ஒரு தாளும் இடம் பெறுகின்றன. ஒன்று முதல் 8ம் வகுப்புவரை பாடம் நடத்த தகுதியுள்ளவர்கள் இரண்டு தாள்களும் எழுத வேண்டும். தாள் 1 (1 முதல் 5ம் வகுப்பு வரை) தேர்வில் குழந்தை மேம்பாடு மற்றும் உளவியல், மொழித்தாள் 1, மொழித்தாள் 2, கணக்கு, சுற்றுச்சூழல் கல்வி ஆகிய பிரிவுகளில் இருந்து தலா 30 கேள்விகள் இடம் பெறும்.  தாள் 2 (6 முதல் 8ம் வகுப்புவரை) தேர்வில் குழந்தை மேம்பாடு மற்றும் உளவியல், மொழி 1, மொழி 2 (கட்டாயம்) எழுத வேண்டும். கணக்கு மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் கேள்விகள் அமையும். சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு அதே பாடத்தில் இருந்து கேள்விகள் இடம் பெறும்.

மற்ற பட்டம் பெற்றவர்கள் மேற்கண்ட கணக்கு அல்லது சமூக அறிவியல் பிரிவில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும் தலா 30 கேள்விகள் இடம்பெறும். தலா ஒரு மதிப்பெண். மேற்கண்ட தேர்வு எழுதுவோர் அந்த தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மதிப்பெண் பெறுகின்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவராவார்.

தேர்ச்சி பெற்றவர்கள், அரசு, உள்ளாட்சி அமைப்பு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளில் ஆசிரியர் பணி செய்யலாம். தகுதித் தேர்வு குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆண்டுகள் வரை பணி வாய்ப்பு பெற தகுதி பெறுவார்.  தகுதித் தேர்வை நடத்த அரசு தரப்பில் ஒரு தலைமை அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். தகுதித் தேர்வுகள் குறித்து தலைமை அதிகாரி ஆண்டுக்கு ஒரு முறை தேசிய ஆசிரியர் கல்வி கழகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்