முக்கிய செய்திகள்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2011      அரசியல்
sarath

சென்னை, மார்ச்.11 - நடைபெறவுள்ள தமிழக சட்ட பேரவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று ஜெயலலிதாவும்,  சரத்குமாரும் கையெழுத்திட்டனர். 

இதுகுறித்த விபரம் வருமாறு:-  

வருகின்ற ஏப்ரல் 13-ந் தேதி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., இடதுசாரிகள், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகிறது. இரு தரப்பிலும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும், மூ.மு.க., பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும், புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.    

அ.தி.மு.க. கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான ஆர்.சரத்குமார் நேற்று மாலை 3.50 மணிக்கு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டிற்கு வந்தார். சரத்குமாருடன் கட்சி நிர்வாகிகள் எர்ணாவூர் நாராயணன், கரு.நாகராஜன், சுந்தரேசன், சுதாகர் ஆகியோர் வந்தனர். ஜெயலலிதாவை சந்தித்து சரத்குமார் சுமார் 30 நிமிடங்கள் பேசினார்.  சந்திப்புக்கு பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், எங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எண்ணிக்கை முக்கியம் இல்லை. ஊழல் ஆட்சி புரியும் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து விரட்ட அ.தி.மு.க. உடன் சேர்ந்து உள்ளோம். தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: